×

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் எங்களை பலவீனப்படுத்த சதி நடக்கிறது: அகாலிதளம் தலைவர் கண்டனம்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆம்  ஆத்மி கட்சி கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. இடையில் பாஜக - அமரீந்தர் கட்சி கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் சிரோன்மணி அகாலிதளம் - மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இந்நிலையில், சிரோன்மணி அகாலிதளம் கட்சி தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல், பஞ்சாப் எல்லைப் பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசுகையில், ‘பஞ்சாப் மக்களின் நம்பிக்கையை எங்களது கட்சி மீண்டும் பெறும்.

அவர்களது (காங்கிரஸ், பாஜக) அபிலாஷைகளை தீர்க்கும் திறமை எங்களிடம் மட்டுமே உள்ளது. எங்களது கட்சியை பலவீனமாக்க சதி நடக்கிறது. அதை தகர்த்து வெல்வோம். எங்களுக்கு எதிரான சதி வேலைகள் புதிதல்ல. தேர்தலுக்கு முன்பு இதுபோல நடப்பது சகஜமாகி விட்டது. ஆனால் அதை நாங்கள் சமாளித்து வெற்றி பெறுவோம். பெண்களின் சக்திக்கு முன்பு எதுவும் நில்லாது. உங்களால் முடியாதது எதுவும் இல்லை. மேற்கு வங்கத்தில் பெண்கள் படைதான் மம்தா பானர்ஜியின் வெற்றிக்குக் காரணம். அதேபோன்ற வெற்றியை அகாலிதளத்திற்கு மக்கள் வழங்க வேண்டும்.

நிச்சயமாக அகாலிதளம் - பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வெற்றியைப் பெறும். கடந்த 2012ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு பஞ்சாப் மக்கள் கட்சி உதயமானது. தேர்தலுக்குப் பின்னர் அதைக் கலைத்து விட்டு காங்கிரஸுடன் சேர்ந்துவிட்டனர். இப்போது பாஜகவுடன் இணைந்து காங்கிரஸும் எங்களுக்கு எதிராக செயல்படுகிறது. ஆனால் அதை நாங்கள் முறியடிப்போம்’ என்றார்.


Tags : Punjab Assembly elections ,Akalidalam , Conspiracy to weaken us in Punjab Assembly elections: Akali Dal leader condemned
× RELATED பஞ்சாப் மாகாண முதல் பெண் முதல்வராக நவாஸ் ஷெரீப் மகள் பதவியேற்கிறார்