×

நடிகை பலாத்கார வழக்கு; எனக்கு எதிராக போலீஸ் சதி: நடிகர் திலீப் புகார்

திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கில் எனக்கு எதிராக போலீஸ் சதி வேலை செய்கிறது என்றும், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி நடிகர் திலீப், கேரள டிஜிபியிடம் புகார் கொடுத்துள்ளார். பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பிப்ரவரிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்திற்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட காட்சிகள், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் உள்ள நடிகர் திலீப்பிடம் இருப்பதாகவும், அவர் உள்பட சிலர் அந்த காட்சிகளை பார்த்தது தனக்கு தெரியும் என்று நடிகர் திலீப்பின் நண்பரும், இயக்குனருமான பாலச்சந்திரன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாலச்சந்திரன் கூறியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி பாதிக்கப்பட்ட நடிகை, சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் கொடுத்திருந்தார்.

இது தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி போலீஸ் தரப்பிலும் விசாரணை நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து நடிகர் திலீப்புக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் நடிகர் திலீப், கேரள டிஜிபி அனில் காந்திடம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், நடிகை பலாத்கார வழக்கில் என்னை சிக்க வைக்க போலீஸ் முயற்சிக்கிறது. பாலச்சந்திரன் கூறியதாக வெளியான தகவலின் பின்னணியில் போலீசார்தான் உள்ளனர். இதன் மூலம் எனக்கு எதிராக போலீஸ் சதி வேலை செய்வதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி பைஜு பவுலோஸ்தான் இதன் பின்னணியில் செயல்பட்டுள்ளார். எனவே அவரது போன் அழைப்புகள் மற்றும் வாட்ஸ் அப் விவரங்களை பரிசோதிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Tags : Dileep , Actress rape case; Police conspiracy against me: Actor Dileep complains
× RELATED நடிகை பலாத்கார வழக்கு நடிகர்...