மக்கள் தொகை கணக்கெடுப்பு மீண்டும் ஒத்திப் போனது 2022 ஜூன் வரை மாவட்ட எல்லைகளை மாற்றுவதற்கு தடை: மாநிலங்களுக்கு இந்திய பதிவாளர் ஜெனரல் அறிவுறுத்தல்

புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மீண்டும் ஒத்திப் போனது. அதனால் இந்தாண்டு ஜூன் வரை மாவட்ட எல்லைகளை மாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநிலங்களுக்கு இந்திய பதிவாளர் ஜெனரல் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். இந்திய மக்களின் பல்வேறு வகையான புள்ளிவிபரத் தகவல்களை பத்தாண்டுக்கு  ஒருமுறை இந்திய பதிவாளர் ஜெனரலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரும்  சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக ஒன்றிய, மாநில அரசுகளின் பல்வேறு முக்கிய திட்டப்பணிகள் முடக்கப்பட்டன. அதன்படி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்பட்டு வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பும் (2020-21) ஒத்திவைக்கப்பட்டது. இந்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்த்த நிலையில், தொற்று பரவல் மீண்டும் அச்சுறுத்தி வருவதால் மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கப்படும்? என்ற கேள்விக்கு விடை தெரியாத நிலையே நீடிக்கிறது.

இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘கொரோனா மூன்றாவது அலை காரணமாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) புதுப்பிக்கப்பட வேண்டிய பணியும் உள்ளது. இந்தாண்டு ஜூன் மாதம் வரை மாநிலங்களின் மாவட்ட, தாலுகா, காவல் நிலைய எல்லைகளை மாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளனர். இதன் அடிப்படையில் பார்த்தால் வரும் அக்டோபர் மாதத்திற்கு முன்னர் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை.

முந்தைய அட்டவணையின்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு தேதி மார்ச் 1, 2021 மற்றும் ஜம்மு - காஷ்மீர் , இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் அக்டோபர் 1, 2020 ஆக பின்பற்றப்பட்டு வந்தது. கடந்த 2020 மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, இந்திய பதிவாளர் ஜெனரலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரும் 2020 ஏப்ரல் 1ம் தேதி தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிக்காக தயாராக இருந்தனர். ஆனால், நடைமுறை சிக்கல்களால் ஒத்திவைக்கப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி மற்றும் பணிக்காக ரூ.8,700 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்ட நிலையில், ஒன்றிய அமைச்சரவை ரூ.3,941.35 கோடி ஒப்புதல் அளித்துள்ளது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: