டெல்லியில் கொரோனா பரவல் அதிகரிப்பு : எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுக்கான குளிர் கால விடுமுறை ரத்து

டெல்லி: டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுக்கான குளிர் கால விடுமுறை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தலைநகர் டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு என்பது மும்மடங்காக அதிகரித்துள்ளதாக டெல்லி அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது. டெல்லியை பொறுத்தமட்டில் நேற்று 4,000- க்கும் அதிகமான நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் தொற்று எண்ணிக்கை என்பது கடுமையாக உயர்ந்திருக்கிறது.

இன்று மட்டும் 5,500- க்கும் அதிகமான நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, டெல்லி முழுவதுமே கட்டுப்பாடுகள் என்பது அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே, இந்த கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுக்கான இந்த குளிர்கால விடுமுறை உடனடியாக ரத்து செய்யப்படுவதாக ஒரு சுற்றறிக்கை என்பது அனுப்பப்பட்டு இருக்கிறது. நாளை முதல் வருகிற 10 ஆம் தேதி வரை மருத்துவர்களுக்கான குளிர்கால விடுமுறை என்பது அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது டெல்லி முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் தொற்று என்பது அதிகரித்து வருவதால் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் பற்றாக்குறை என்பது சில மருத்துவமனைகளில் ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் அண்டை மாநிலங்களான ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து தொடர்ச்சியாக நோயாளிகள் தலைநகரை நோக்கி படையெடுக்க தொடங்கியிருப்பதால், அதற்கேதுவாக இந்த விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விடுமுறையானது அத்தியாவசியத்திற்கு மட்டும் தான் என்றும், சாதாரண விடுப்புக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. டெல்லியை பொறுத்தமட்டில் வருகிற வெள்ளி இரவு முதல் திங்கள்கிழமை வரை வார இறுதி நாட்களில் 2 நாட்கள் முழு ஊரடங்கை மாநில அரசு தற்பொழுது அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே பள்ளி மற்றும் கல்லூரிகள் முழுமையாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில்  கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. நோயாளிகளின் வசதிக்காக டெல்லியில் மைதானங்கள், உணவகங்கள், காலி இடங்களில் சிகிச்சை அளிப்பதற்காக தற்காலிக அமைப்புகளை ஏற்படுத்தும் வசதிகள் என்பது தலைநகரில் தற்போது தொடங்கியுள்ளது.                     

Related Stories: