×

டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததாக ஓடும் ரயிலில் பயணியை பூட்ஸ் காலால் மிதித்து வெளியே தள்ளிய எஸ்ஐ சஸ்பெண்ட்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே டிக்கெட் எடுக்கவில்லை என்று கூறி ரயில் பயணியை ரயில்வே போலீஸ்காரர், பூட்ஸ் காலால் மிதித்து ரயிலில் இருந்து வெளியே தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் மாவேலி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு கண்ணூரை கடந்து சென்றது.

அப்போது ‘எஸ் 2’ பெட்டியில் ஒருவர் குடிபோதையில் இருப்பதாக ரயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனே எஸ்ஐ பிரமோத் தலைமையில் ரயில்வே போலீசார், அந்த பெட்டிக்கு விரைந்து சென்று பயணியிடம் விசாரணை நடத்தினர். முன்பதிவு பெட்டியில் பயணம் செய்வதற்கான டிக்கெட் அவரிடம் இல்லை என தெரியவந்தது. உடனே அவரை வெளியேற்ற முயற்சித்தனர். இந்த சமயத்தில் எஸ்ஐ பிரமோத், அந்த பயணியை பூட்ஸ் காலால் மிதித்து தாக்கினார். இதற்கிடையே அந்த ரயில் வடகரை ஸ்டேஷனை அடைந்தது. பூட்ஸ் காலால் மிதித்து ரயிலில் இருந்து பயணியை எஸ்ஐ வெளியே தள்ளினார். இதை பார்த்த பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த காட்சிகளை அங்கிருந்த ஒரு பயணி, தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அவற்றை பார்த்த பலர், போலீசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து எஸ்ஐ பிரமோத் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இதுகுறித்து ரயில் பயணி ஒருவர் கூறுகையில், ‘ரயிலில் போலீசார் சட்ட விரோதமாக பயணிகளின் டிக்கெட்டுகளை பரிசோதித்தனர். அந்த பயணியிடமும் போலீசார் டிக்கெட்டை கேட்டனர். அவர் தனது டிக்கெட்டை தேடுவதற்குள் பலமுறை அவரது முகத்தில் போலீசார் அடித்தனர்.

அடிக்க வேண்டாம் என்று நான் உட்பட பயணிகள் கூறிய போதிலும் போலீசார் கேட்கவில்லை. அந்த பயணி மது அருந்தியிருந்தது போல தோன்றியது. ஆனாலும் மற்ற பயணிகளுக்கு அவர் எந்த இடையூறும் செய்யவில்லை. டிக்கெட் இல்லாவிட்டால் கூட பயணியை அடிப்பதற்கு போலீசாருக்கு எந்த உரிமையும் கிடையாது. எனவே போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.பயணியை தாக்கிய சப் இன்ஸ்பெக்டர் பிரமோத் கூறும்போது, டிக்கெட் இல்லாததால்தான் அந்த பயணியை ரயிலில் இருந்து இறக்கி விட்டேன். அவரது பெயர், விபரங்கள் எதுவும் தெரியாது. அவர் மீது வழக்கும் பதிவு செய்யவில்லை’ என்றார்.

Tags : SI , Boots a passenger on a moving train who claims to have traveled without a ticket SI suspended for trampling out
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...