×

40 நாட்களுக்கும் மேலாக 140 அடிக்கு மேல் நீர் இருப்பு: கேரளா பரப்புரை பொய் என நிரூபித்த முல்லைப் பெரியாறு அணை

இடுக்கி: முல்லைப் பெரியாறு அணையில் 40 நாட்களுக்கும் மேலாக 140 அடிக்கு மேல் நீர் தேக்கி வைக்கப்பட்டிருப்பதன் மூலம் கேரளாவின் விஷம பரப்புரைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு உழவர்கள் தெரிவித்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து அச்சம் எழுப்பி வரும் கேரளா அரசு அணையில் 136 அடி வரை கூட நீரை தேக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அண்மையில் பெய்த பருவ மழையால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, உச்சநீதி மன்ற உத்தரவின் படி 142 அடிவரை நீர் தேக்கப்பட்டது.

தொடர்ந்து 40 நாட்களுக்கும் மேலாக அணையில் 140 அடிக்கும் மேல் தண்ணீர் இருக்கிறது. இதனால் அணையை நம்பியிருக்கும் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட உழவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அணை பலவீனமாக இருப்பதாக கேரளா பரப்பி வந்த புரளிக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாக முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது. காலை நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 140.20 அடியாக இருக்கிறது. அணைக்கு 446 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 1,200 கனஅடி நீர் தமிழ்நாட்டிற்கு திறக்கப்பட்டிருக்கிறது.            


Tags : Mullaperiyar Dam ,Kerala , 40 days, 140 feet, water reserve, Kerala, campaign, lie, Mullaiperiyaru dam
× RELATED தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக...