கொழும்பு: பெருமளவு நிதிச்சிக்கல்களால் இலங்கை அரசு ஏற்கனவே விழி பிதுங்கியிருக்கும் நிலையில், பணவீக்கம் வரலாற்று உச்சத்தை எட்டியிருப்பதால் அந்நாடு திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பணவீக்கத்தால் இலங்கையில் உணவு பொருட்களின் விலை இறக்கை கட்டி பறக்கிறது. இலங்கையின் பணவீக்கம் 11.1 சதவீதத்தில் இருந்து டிசம்பர் மாதம் 12.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேபோல உணவு பணவீக்கம் 17.5 சதவீதத்தில் இருந்து 22.1 சதவீதமாக அதிகரித்துவிட்டது. கொரோனா பாதிப்பில் இருந்து மீளமுடியாமலும், அதற்கான செலவுகளை எதிர்கொள்ள முடியாத நிலையிலும் இலங்கை அரசு கஜானா காலியாக உள்ளது. பல்வேறு நாடுகளில் வாங்கியுள்ள கடன்களையும் இலங்கை அரசால் செலுத்த முடியவில்லை.
குறிப்பாக சீனாவிடம் பெற்றுள்ள பெரும் கடன் இலங்கையின் பொருளாதாரத்தையே புரட்டி போடுவதாக உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பும் மிக மிக சொற்பமாக இருப்பதால் அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு எப்போது வேண்டுமானாலும் திவாலாகும் அபாயகரமான நிலையில் ஆழியில் ஓடமாக தத்தளித்து வருகிறது. இலங்கையில் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு சுமார் 5 லட்சம் பேர் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டிருப்பதாக உலக வங்கியின் தரவுகள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.