×

தீவிரமடையும் கொரோனா பரவல்; கர்நாடகாவிலிருந்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு வந்து சென்ற 35 பக்தர்களுக்கு தொற்று உறுதி.!

மாண்டியா: கர்நாடகாவிலிருந்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு வந்து சென்ற 35 பக்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பொதுமக்கள் தேவையில்லாமல் பொது இடங்களில் கூட வேண்டாம் எனவும், வெளியில் செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் ஸ்ரீரங்கபட்டினத்தில் இருந்து 3 பஸ்களில் தமிழகத்துக்கு சுற்றுலா வந்த 100 பேர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வந்து விட்டு தங்கள் மாநிலத்துக்கு திரும்பி உள்ளனர்.

ஒவ்வொரு பஸ்களில் 35 பேர் வரை இருந்துள்ளனர். கர்நாடகாவில் அந்த மாநில அரசும் கொரோனா பரவலை தடுக்க தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மேல்மருவத்தூரில் இருந்து சென்றவர்களுக்கு நடந்த பரிசோதனையில் 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனை அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதுபற்றிய தகவல் கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழக சுகாதாரத்துறைக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மேல்மருவத்தூர் பகுதியில் உள்ள சுகாதார அலுவலர்களை உஷார் படுத்தி உள்ளனர். இதைத் தொடர்ந்து மேல்மருவத்தூர் கோவிலில் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

கர்நாடகாவில் இருந்து மேல்மருவத்தூருக்கு வந்த 3 பஸ்களில் 2 பஸ்கள் மட்டுமே அந்த மாநிலத்துக்கு சென்றுள்ளது. அதில் இருந்தவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் தான் 35 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் ஒரு பஸ்சில் இருப்பவர்கள் விரைவில் கர்நாடகா திரும்ப உள்ளனர். இவர்கள் மேல்மருவத்தூர் சென்று விட்டு மேலும் பல இடங்களை சுற்றி பார்த்து விட்டு சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாகவே அவர்கள் கர்நாடகா செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று இரவு அல்லது நாளை அந்த பஸ் கர்நாடகா சென்றதும் அதில் இருப்பவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

Tags : Melmaruvathur ,Karnataka , Intensifying corona spread; 35 devotees who came to Melmaruvathur temple from Karnataka have been diagnosed with the disease.
× RELATED ஆதிபராசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில்...