×

விராலிமலையில் பொலிவுபெற காத்திருக்கும் கலைஞரின் கனவு திட்டமான சமத்துவபுரம்-10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடக்கிறது

விராலிமலை : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் சமூக நீதி திட்டமான சமத்துவபுரங்கள் கடந்த பத்தாண்டுகளாக எவ்வித பராமரிப்பும் இல்லாமல் புல்,புதர்கள் மண்டி கிடக்கிறது. தமிழகத்தில் பெறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு வீடுகளை விரைந்து மராமத்து பணிகள் செய்து பெரியார் நினைவு சமத்துவபுரத்தை புது பொலிவு ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சமுக நீதி,சமத்துவம் சிந்தனைவுடையவர்கள் மத்தியில் வலுத்து வருகிறது.

நாடு விடுதலை பெற்றபின் சாதி, பேதம் ஒழிய, தீண்டாமைக் கொடுமை அகற்ற பல்வேறு சட்டங்களுடன், திட்டங்களும் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. என்றாலுங்கூட, சாதியும், மதமும் நாட்டின் முன்னேற்றத்துக்குத் பெரும் தடையாக அமைந்து மக்களிடையே பகைமை உணர்வுகளையும், பிளவுகளையும் ஏற்படுத்துவதற்கு சாதி ஒரு கருவியாகவும், காரணமாகவும் இருப்பதை கவனத்தில் கொண்டு சாதி வேறுபாடுகளை முற்றிலும் மறந்து தமிழ் சமுதாயம் ஒரே சமுதாயமாக வாழவேண்டும் அது உறுதி பெற வேண்டும் என்ற உண்ணத நோக்கில் கலைஞரால் தொடங்கப்பட்ட ஒரு திட்டம்தான் பெரியார் நினைவு சமத்துவபுர திட்டம்.

ஆதிதிராவிட மக்கள் உள்பட அனைத்துச் சமூகத்தினரும் நல்லிணக்கத்தோடு சமத்துவமாக ஒரே மாதிரியான குடியிருப்பில் அருகருகே ஒற்றுமையாக வாழும் வகையில் சமத்துவபுரங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்படும் என கடந்த 1997-ம் ஆண்டு இந்தியா சுதந்திரப் பொன்விழா கொண்டாடப்பட்டத்தின் போது, இந்தியாவிலேயே முதன் முதலாக அப்போதைய முதல்-அமைச்சர் கலைஞரால் அறிவிக்கப்பட்ட திட்டம் தான் பெரியார் நினைவு சமத்துவபுர திட்டம். அந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே மேலக்கோட்டையில் தமிழகத்திலேயே முதல் பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட்டு கடந்த 17.8.1998 ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, திமுக. ஆட்சி நடைபெற்ற 2001 மே திங்கள் வரை தமிழகம் முழுவதிலும் 145 சமத்துவபுரங்கள், 2006-2011 காலகட்டங்களில் 95 சமத்துவபுரங்கள் என திமுக ஆட்சியில் 240 சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள் வலுப்பெறவும், சாதி சமயமற்ற, சமத்துவ சமுதாயம் உருவாக்கப்படவும் நுழைவு வாயிலில் பெரியார் சிலை அமைக்கப்பட்டு தலா 3 சென்ட் நிலப்பரப்பில் ஆதிதிராவிடர்களுக்கு 40 வீடுகள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25 வீடுகள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25 வீடுகள், பிராமணர்கள் உள்பட இதர சாதியினருக்கு 10 வீடுகள் என 100 வீடுகள் வீதம், மொத்தம் 240 சமத்துவபுரங்களிலும் 24 ஆயிரம் வீடுகள் மற்றும் வழிபாட்டு தலங்கள், பூங்கா உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடனும் கட்டப்பட்டு, அந்தந்த சாதியினருக்கு ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு அனைத்து சாதியினரும் அங்கு குடியேறினர்.

அதனைத் தொடர்ந்து 2001-ல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அதிமுக அரசு சமத்துவ புரங்களை முறையாகவும், சரியாகவும் பராமரிக்கவில்லை அதன் காரணமாக அவையனைத்தும் சீரழிந்தும் புல், புதர்கள் மண்டியும் விரிசல்கள் கண்டு இடிந்தும் மக்கள் வாழ தகுதியில்லாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் 2006-ல் மீண்டும் திமுக அரசு அமைந்தபிறகு பெரியார் நினைவு சமத்துவபுர குடியிருப்புகளை மேம்படுத்திட 14 கோடியே 50 லட்ச ரூபாய் நிதியை திமுக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவைகள் அப்போது மராமத்து பணிகள் செய்யப்பட்டன என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக அரசு, திமுக அரசு கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக பெரியார் நினைவு சமத்துவபுரங்களை நினைவில் கொள்ளாமல் பாராமுகம் காட்டியதோடு பாராமரிப்பையும் கிடப்பில் போட்டுவிட்டது. அதன் விளைவாகவும், கட்டடங்களுக்கு வயதாகிவிட்டதாலும், தமிழகத்தில் எற்பட்ட பல்வேறு இயற்கை சீற்றத்தாலும் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் புல், புதர்கள் மண்டி வீடுகள் விரிசல் கண்டு வருகின்றன. பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம் என்பது தனது கனவு திட்டம் என்றும், சாதி பேதங்களற்ற சமத்துவ சமுதாயமே என்னுடைய லட்சியம் என்று வாழ்ந்த கலைஞரின் சமுக நீதி திட்டத்திற்கு உயிர் கொடுத்து புதிய பொலிவுடன் சமத்துவபுரங்கள் காட்சியளிக்க மராமத்து பணியை எதிர்நோக்கி சமத்துவபுரங்கள் தற்போது காத்திருக்கின்றன.

Tags : Samathuvapuram ,Viralimalai , Viralimalai: The late Chief Minister of Tamil Nadu's artist's social justice project Samathuvapuras has not received any maintenance for the last ten years.
× RELATED உடையார்பாளையம் அருகே பழமையான பல்லவர் கால அய்யனார் சிலை கண்டெடுப்பு