கோவையில் நீர்நிலைகள் பாதிப்பு குறித்து ஆய்வு செய்த மாணவியை தாக்கியதாக செங்கல் சூளை உரிமையாளர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்

கோவை: கோவை தடாகத்தில் நீர்நிலைகள் பாதிப்பு குறித்து ஆய்வு செய்த 17 வயது மாணவி சாந்தலாவை தாக்கியதாக செங்கல் சூளை உரிமையாளர் மீது மாணவி புகார் அளித்துள்ளார். கோவை துடியலூர் ரோடுசின்னதடாகம், மாங்கரை, நஞ்சுண்டாபுரம், சோமையனூர், பன்னிமடை, கணுவாய் ஆகிய இடங்களில் 200-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வந்தன. ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக அங்கு செங்கல் சூளைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 மாதங்களாக செங்கல் சூளைகள் சீல் வைக்கப்பட்டு மூடி கிடக்கின்றன.

கோவை தடாகம் பள்ளத்தாக்கில் உள்ள ஓடைகளில் நீர் வரத்து இருந்தும் கணுவாய் தடுப்பணைக்கு நீர் வரவில்லை. இது தொடர்பாக காளையனூர் கிராமம் அருகே ஜனவரி 2-ம் தேதி அனுவாவி-கருப்பராயன் ஓடையை மாணவி ஆய்வு செய்தபோது காவல் துறையினர் முன்னிலையில் வி.கே.வி. செங்கல் சூளை உரிமையாளர் சுந்தரராஜனின் ஆட்களால் தாக்கப்பட்டதாக மாணவி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்

டிரோனை பறக்கவிட்டு ஆய்வு செய்தபோது, டிரோன் காணாமல் போய்விட்டதால் தேடிக் கொண்டிருந்த மாணவி மீது தாக்குதல் நடத்தியதாக புகார் மனுவில் மாணவி கூறியுள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்க மாணவி சாந்தலா கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: