குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் தமிழக அரசின் திட்டத்திற்குஒன்றிய உணவுத் துறை செயலாளர் பாராட்டு!!

டெல்லி : இந்தியாவிலேயே பொது விநியோக திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துணை செயலாளர் சுதான்சு பாண்டே பாராட்டு தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு திட்டங்களின் அமலாக்கம் தொடர்பாக, உதகமண்டலத்தில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் திரு. சுதான்சு பாண்டே ஆய்வு  மேற்கொண்டார். அப்போது, பொது விநியோக ஆணையர் வி.ராஜாராமன் ஐஏஎஸ், மாவட்ட ஆட்சியர் திரு. பி.அம்ரித் மற்றும் மாநில அரசின் இதர அதிகாரிகள் உடன் இருந்தனர்.இந்த கூட்டத்தில் பேசிய சுதான்சு பாண்டே, தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்திற்கு பாராட்டுத் தெரிவித்தார்.

உதகமண்டலம் பலாகோலா பகுதியில் உள்ள வேளாண் கூட்டுறவு சங்கத்தின் நியாயவிலைக் கடையை பார்வையிட்ட சுதான்சு  பாண்டே உணவு தானியங்களின் தரத்தையும் சோதனை செய்தார். தொடர்ந்து, தமிழக அரசின் 58 உணவு தானிய கிடங்குகளில் 56 கிடங்குகள்  சேமிப்புக்கான தர சான்றிதழ் பெற்றிருப்பதை உணவுத்துறை செயலாளர் பாராட்டினார். கடந்த 5 ஆண்டுகளில், குறைந்தபட்ச ஆதரவு விலையிலான நெல் கொள்ளுமுதல் 3 மடங்கு அதிகரித்துள்ளதையும் அவர் பாராட்டினார். மேலும்  புலம்பெயர் தொழிலாளர்களிடம், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி  மாவட்ட ஆட்சியரிடம், உணவுத்துறை செயலாளர் அறிவுறுத்தினார். ‘மேரா ரேஷன்’ என்ற செயலியை  பதிவிறக்கம் செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

Related Stories: