ஜன.20க்குள் 390 காவலர் பணியிடங்களுக்கு தேர்வு காவல்துறையில் இந்தாண்டிலேயே ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்-உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரி :  புதுச்சேரி காவலர் துறையில் சிறப்பு நிலை சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு நிலை உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை செயலர், ஓட்டுநர், ஸ்டோர் கீப்பர், கணினி இயக்குபர் உள்ளிட்ட பதவிகளில் 163 பேருக்கு பதவி வழங்க வழங்கப்பட்டது. அவர்களுக்கு நேற்று காவல் தலைமையகத்தில் நடந்த விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதவி உயர்வு ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏடிஜிபி ஆனந்தமோகன், டிஐஜி மிலிந்த் தும்ப்ரே, சீனியர் எஸ்பிக்கள் பிரதிக்‌ஷா ெகாடாரா, ராகுல் அல்வால், லோகேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர், அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது: மக்கள் நிம்மதியாகவும், அமைதியாகவும் வாழ வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது. ஆபரேஷன் விடியல் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படும் பகுதிகள் கண்காணிக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதற்காக ஆபரேஷன் திரிசூலம் என்ற திட்டத்தை ஆரம்பித்து தொடர் குற்றத்தில் ஈடுபடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜன.20ம் தேதிக்குள் 390 காவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படவுள்ளது.

இதில் தேர்வு செய்யப்படும் காவலர்கள் தேவைப்படும் இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். 2ம் கட்டமாக 300 காவலர் பணியிடங்கள், 400 ஊர்க்காவல் படை வீரர் பணியிடங்கள் என காவல்துறை மூலம் இந்தாண்டிலேயே 1,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. 47 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நேரடியாக தேர்வு செய்ய மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம். அங்கிருந்து அனுமதி கிடைத்தவுடன் நேரடி தேர்வு மூலம் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடம் நிரப்பப்படும்.

ஆபரேஷன் விடியல் மூலம் 88 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளோம். 133 பேருக்கு மேல் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.  இந்நிகழ்ச்சியில் ஏடிஜிபி ஆனந்தமோகன் பேசுகையில், ஆபரேஷன் திரிசூலம் மூலம் ரவுடிகளை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளோம். இதுவரை 21 பேர் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: