×

வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் மோசடி கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பட்டதாரி வாலிபர் தீக்குளிக்க முயற்சி

கிருஷ்ணகிரி : அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, ₹7 லட்சத்தை ஏமாற்றிய அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், பட்டதாரி வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரி அருகே உப்புக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் தசரதன்(34). பட்டதாரியான இவர், நேற்று காலை கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்தார். அப்போது, கையோடு கொண்டு வந்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணையை, தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அதனைக் கண்டு அங்கிருந்த போலீசார், கேனை தட்டி விட்டனர். பின்னர், தண்ணீரை எடுத்து தசரதன் மீது ஊற்றினர். அவரிடம் நடத்திய விசாரணையில் தசரதன் கூறியதாவது:

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் ஜெயலட்சுமி மற்றும் சென்னை பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றி வரும் முருகபாபு ஆகியோர், சென்னையில் மத்திய அரசு பணியில் ஜூனியர் அசிஸ்டெண்ட் வேலை வாங்கித் தருவதாகக் கூறியதால், கடன் வாங்கி ₹7 லட்சத்தை கொடுத்தேன். ஆனால், வேலையும் வாங்கித்தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை.
இதுகுறித்து போலீசில் புகார் அளித்தபோது, டிஎஸ்பி., ஈஸ்வரமூர்த்தி விசாரித்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவர்களிடமிருந்து ₹50 ஆயிரம் மட்டும் வாங்கி கொடுத்தார். மீதிப் பணத்தை விரைவில் தருவதாக ஜெயலட்சுமி மற்றும் முருகபாபு ஆகியோர் எழுதிக் கொடுத்தனர்.

ஆனால், இன்று வரை பணத்தை திருப்பித்தரவில்லை. இதனால், கடந்த ஒரு ஆண்டாக திருமணம் செய்யாமலும், வேலையில்லாமலும், கடன் தொல்லையாலும் மன உளைச்சலுக்குள்ளாகி பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளேன். இனியும் என்னால் வாழ முடியாது என்பதால், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Krishnagiri Collector , Krishnagiri: The Krishnagiri Collector has demanded action against government employees who cheated 7 lakh by claiming that the government would buy them jobs.
× RELATED கோவையில் நடைபெறும் திறன் மேம்பாட்டு...