×

சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் பஞ்சாபில் ரூ. 42,750 கோடிக்கும் மேல் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!!

டெல்லி : ஜனவரி 5, 2022-ல் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, பிற்பகல் 1 மணியளவில் ரூ. 42,750 கோடிக்கும் மேல் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச்சாலை; அமிர்தசரஸ் – உனா  நெடுஞ்சாலையை 4 வழிப்பாதையாக மேம்படுத்துதல்; பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த முகேரியன்-தல்வாரா புதிய அகல ரயில்பாதை; பெரோஸ்பூரில் முதுநிலை மருத்துவ மையத்தின் கிளை மையம் மற்றும் கபூர்தலா மற்றும் ஹோஷியார்பூரில் 2 புதிய மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

 நாடுமுழுவதும் போக்குவரத்து இணைப்பு வசதிகளை மேம்படுத்த பிரதமர் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளால், பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதன்காரணமாக, இம்மாநிலத்தில் 2014 ஆம் ஆண்டில் 1,700 கிலோமீட்டராக இருந்த தேசிய நெடுஞ்சாலைகளின் தூரம் 2021-ல் 4,100 கிலோமீட்டருக்கு மேல் உள்ளது.    இதுபோன்ற முயற்சிகளின் தொடர்ச்சியாக, பஞ்சாபில் 2 பெரிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது.

மதரீதியான முக்கிய மையங்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதியை மேம்படுத்துவது என்ற பிரதமரின் தொலைநோக்கு சிந்தனைக்கு ஏற்ப, இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.  டெல்லி- அமிர்தசரஸ்-கத்ரா இடையே 669 கிலோமீட்டர் தொலைவுக்கான விரைவுச்சாலை ரூ.39,500 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. இந்த விரைவுச்சாலை, டெல்லி –அமிர்தசரஸ் மற்றும் டெல்லி- கத்ரா இடையிலான பயணத்தொலைவை பாதியாக குறைக்கும்.  

இந்த பசுமை விரைவுச்சாலை, சுல்தான்பூர் லோதி, கோவிந்த்வால் சாஹிப், கடூர் சாஹிப், தரண் தரண் போன்ற இடங்களில் உள்ள சீக்கிய மத வழிபாட்டுத் தலங்களையும், கத்ராவில் உள்ள இந்துக்களின் புனித தலமான வைஷ்ணவ் தேவி கோயிலையும்  இணைப்பதாக அமையும்.   இதுதவிர, ஹரியானா, சண்டிகர், பஞ்சாப் மற்றும் ஜம்மு கஷ்மீரில் உள்ள முக்கிய பொருளாதார  மையங்களான அம்பாலா, சண்டிகர், மொகாலி, சங்ரூர், பட்டியாலா, லூதியானா, ஜலந்தர், கபூர்தலா, கதுவா மற்றும் சம்பா ஆகியவற்றை இணைப்பதாகவும் இந்த விரைவுச்சாலை அமையவுள்ளது.

அமிர்தசரஸ்-உனா பிரிவை நான்கு வழிப்பாதையாக்கும் பணி, சுமார் 1,700 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது.  வட பஞ்சாப் மற்றும் இமாச்சலப்பிரதேசம் இடையிலான அமிர்தசரஸ் – போட்டா நெடுஞ்சாலையின் மிக நீண்ட பகுதியாக 77 கிலோமீட்டர் தொலைவு உள்ள இந்த சாலை, அமிர்தசரஸ் – படிண்டா – ஜாம்நகர் பொருளாதார பெருவழித் தடம், டெல்லி-அமிர்தசரஸ் – கத்ரா விரைவுச்சாலை, வடக்கு-தெற்கு பெருவழிப்பாதை மற்றும் காங்ரா – ஹமீர்பூர்-பிலாஸ்பூர்-சிம்லா பெருவழித்தடம் ஆகிய நான்கு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளை இணைப்பதாக அமையவுள்ளது.  இந்த சாலை, கோமேன், ஸ்ரீ ஹர்கோபிந்த்பூர் மற்றும் புல்புக்தா நகரம் (பிரசித்திப் பெற்ற குருத்வாரா புல்புக்தா சாஹிப்) ஆகிய இடங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து இணைப்பு வசதிகளை மேம்படுத்த உதவும்.

முகேரியன் – தல்வாரா இடையே, ரூ.410 கோடி மதிப்பீட்டில்,  27 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படவுள்ள புதிய அகல ரயில் பாதைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். இந்த ரயில்பாதை நங்கல் தாம் – தவ்லத்பூர் சவுக் ரயில்பாதையின் விரிவாக்கமாக அமையவுள்ளது.  இது இப்பகுதிக்கு அனைத்து பருவகாலங்களிலும் செல்வதற்கு ஏற்றதாக அமையவுள்ளது.  அத்துடன் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டம், ஜம்மு-கஷ்மீருக்கான மாற்றுப்பாதையாக அமைவதுடன், முகேரியனில் தற்போதுள்ள ஜலந்தர் – ஜம்மு ரயில்பாதையுடன் இணைப்பதாகவும் அமையவுள்ளது.  இத்திட்டம் பஞ்சாபின் ஹோஷியார்பூர் மற்றும் இமாச்சலப்பிரதேசத்தின் உனா பகுதி மக்களுக்கு பெரும் பயனளிப்பதாக இருக்கும். இது, இப்பகுதியில் சுற்றுலாத் தொழிலுக்கு ஊக்கம் அளிப்பதுடன், மலைவாசஸ்தலங்கள் மற்றும் முக்கியமான மத வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து இணைப்பு வசதியை எளிதாக்குவதாகவும் அமையும்.

     நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவது என்ற பிரதமரின் முயற்சியின் படி, பஞ்சாபில் உள்ள 3 நகரங்களில் புதிய மருத்துவக் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கும் அடிக்கல் நாட்டப்படவுள்ளது.  பெரோஸ்பூரில் அமையவுள்ள முதுநிலை மருத்துவக் கல்லூரியின் 100 படுக்கை வசதி கொண்ட துணை  மையம், சுமார் ரூ.490 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது.  இந்த மையம், உள்மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, கண்நோய், காது-மூக்கு-தொண்டை மற்றும் மனநலம் மற்றும் போதை மறுவாழ்வு உள்ளிட்ட 10 சிறப்புத் துறைகளில் மருத்துவ சேவை அளிப்பதாக அமையும்.  இந்த துணை மையம், பெரோஸ்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ளவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளை அளிக்கும்.

கபூர்தலா மற்றும் ஹோஷியார்பூரில் 100 மருத்துவ படிப்பு இடங்களுடன் தலா ரூ.325 கோடி ரூபாய் செலவில் 2 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படவுள்ளது.  ‘மாவட்ட/ஆராய்ச்சி மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகளை ஏற்படுத்துதல்’ என்ற மத்திய நிதியுதவியுடன் கூடிய திட்டத்தின் 3 ஆம் கட்டமாக இந்த கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின்கீழ் பஞ்சாபிற்கு மொத்தம் 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.  இதில் சாஸ்நகரில் முதற்கட்டத்தின்போது அனுமதி அளிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி ஏற்கனவே செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

Tags : Punjab ,Assembly elections ,Modi , பிரதமர், நரேந்திர மோடி, பஞ்சாப்
× RELATED சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...