திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 94,967 சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி

* கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்

* முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் என எச்சரிக்கை

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 94,967 சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் நேற்று தொடங்கி வைத்தார்.

கொரோனா தொற்றில் இருந்து தற்காக்கும் ஆயுதமாக தற்போது தடுப்பூசி அமைந்திருக்கிறது. எனவே, நாடுமுழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில், 10ம் வகுப்பு மாணவர்கள் 34,331 பேர், பிளஸ் 1 மாணவர்கள் 30,880 பேர், பிளஸ் 2 மாணவர்கள் 29,756 பேர் உ;ட்பட மொத்தம் 94,967 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் மாணவர்களின் விபரம் கோவின் செயலியில் ஆதார் எண் அல்லது பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றின் மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது.இந்நிலையில், திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை, எம்பி சி.என்.அண்ணாதுரை, சிஇஓ அருள்செல்வம் ஆகியோர் முன்னிலையில், கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.

அப்போது, கலெக்டர் தெரிவித்ததாவது:

கொரோனா தொற்று தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று மட்டும் 12 பேருக்கு தொற்று பாதித்திருக்கிறது. இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது. தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம்.மாவட்டம் முழுவதும், 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களில் இதுவரை 90 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக்ெகாண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை நூறு சதவீதமாக உயர வேண்டும்.

வீட்டைவிட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணிந்து வருவது அவசியம். முகக் கவசம் அணிய தவறினால், இதுவரை நாம் எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாகிவிடும். பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அரசு தெரிவித்துள்ள வழிகாட்டுதல்படி அபராதம் மற்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 பேருக்கு ஒமிக்ரான் ெதாற்று கண்டறியப்பட்டது. சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட முயற்சியால், அந்த தொற்று பரவல் கட்டுக்குள் வந்தது. ஆனால், கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில், சுகாதார பணிகள் துணை இயக்குநர் செல்வகுமார், ஆர்டிஓ வெற்றிவேல், முன்னாள் நகராட்சித் தலைவர் இரா.தரன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் கார்த்திவேல்மாறன், பிரியா விஜயரங்கன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டிவிஎம் நேரு, தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும், ஒன்றிய அரசு பரிந்துரை செய்துள்ள கோவாக்சின் தடுப்பூசி சிறுவர்களுக்கு செலுத்தப்படுகிறது. அதன்படி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி செலுத்த தகுதியுள்ள 1,500 மாணவிகளில் நேற்று 400 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

போளூர்: போளூரில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் 18 வயது வரை உள்ள 1109 மாணவிகளின் பெற்றோர்கள் அனுமதி கடிதத்துடன் தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. தலைமையாசிரியர் பா.தாமரைசெல்வி வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.சுந்தர் மாணவிகளுக்கு தடுப்பூசி போட்டு பணியை துவக்கி வைத்தார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், போளூர் பகுதியில் 6 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட 36 பள்ளிகள் உள்ளது. இதில் 15 வயது முதல் 18 வயது வரை 5,920 மாணவிகள் உள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசின் உத்தரவின்படி பெற்றோர்கள் அனுமதி கடிதத்துடன் தடுப்பூசி போடப்படுகிறது என்றார்.

பாடப் புத்தகங்களில் விழிப்புணர்வு முத்திரை

பெண் குழந்தைகளின் அவசரகால தேவை மற்றும் பாதுகாப்புக்கு உதவிடும் கட்டணமில்லா தொலைபேசி எண்  உள்ளிட்ட விவரங்களை மாணவிகள் தெரிந்துகொள்ள வசதியாக, அவர்களுடைய பாடப் புத்தகங்களில் விழிப்புணர்வு முத்திரையாக பதிவு செய்யப்படுகிறது. அதன்படி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் பாடப் புத்தகங்களில் விழிப்புணர்வு வாசக முத்திரை பதிக்கும் பணியை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.

அதில், அரண் செய், அச்சம் தவிர், எதிர்த்து நில், கல்விஉதவி வழிகாட்டி மையம் -14417, குழந்தைகள் உதவி எண் 1098 என்ற விவரங்கள் விழிப்புணர்வு முத்திரையில் இடம் பெற்றுள்ளது.

மேலும், மாணவிகளுக்கு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் கட்டணமில்லாத உதவி எண்களை எந்த நேரத்திலும் தொடர்புகொள்ளலாம் என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

Related Stories: