திருச்சி அருகே வாகன தணிக்கையில் பணம் கேட்டு லாரி டிரைவரை தாக்கிய சப் இன்ஸ்பெக்டர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார் டிஐஜி

முசிறி: வாகன தணிக்கையின் போது ரூ.5 ஆயிரம் கேட்டு லாரி டிரைவரை தாக்கிய சப் இன்ஸ்பெக்டரை கண்டித்து டிரைவர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து டிஐஜி உத்தரவிட்டார். திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்கேட் அருகே திருச்சி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் நேற்று காலை 9.30 மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது சென்னையில் இருந்து திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவனத்திற்கு இரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது.

அந்த லாரியை டிரைவர் ஆயரசன் ஓட்டி வந்தார். லாரியில் நிர்ணயித்த அளவை விட கூடுதலாக இரும்பு பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் எஸ்ஐ செல்வராஜ், டிரைவரிடம் ரூ.5 ஆயிரம் அபராதம் தரும்படி கேட்டதாக தெரிகிறது. இதற்கு அவர் மறுக்கவே பணம் கொடுத்தால் தான் லாரியை விடுவேன் என உதவி ஆய்வாளர் செல்வராஜ் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த எஸ்ஐ செல்வராஜ், லாரி டிரைவர் ஆயரசனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட லாரி டிரைவர், கனரக லாரி டிரைவர்களுடன் சேர்ந்து திருச்சி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் லாரியை குறுக்காக நிறுத்தி திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சமயபுரம், டோல்கேட் போலீசார் வந்து டிரைவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து 10.30 மணியளவில் டிரைவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து, வாகன தணிக்கையின் போது லாரி டிரைவரை மரியாதை குறைவாக பேசி, தாக்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் எஸ்ஐ செல்வராஜை சஸ்பெண்ட் செய்து திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் உத்தரவிட்டார்.

Related Stories: