×

திண்டுக்கல்லில் மீன்பிடிப்பதற்காக குளத்தை குத்தகை எடுத்த தகராறு: துப்பாக்கியால் சுட்டு வாலிபர் கொலை: 12 மணி நேரத்தில் 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மீன் பிடிப்பதற்காக குளத்தை குத்தகைக்கு எடுத்ததில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, வாலிபர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். கொலையாளிகளை 12 மணி நேரத்தில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திண்டுக்கல், மேற்கு மரியநாதபுரத்தை சேர்ந்தவர் ராக்கி (எ) ராகேஷ்குமார் (26). இவரது தந்தை மாணிக்கம், மரியநாதபுரம் அருகே மாலப்பட்டியில் உள்ள செட்டிகுளத்தை, மீன் பிடிப்பதற்காக குத்தகைக்கு எடுத்துள்ளார். இந்த குளத்தின் இரவு காவலுக்கு ராகேஷ்குமார் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் 3 பேருடன் ராகேஷ்குமார் காவலுக்கு சென்றார். நேற்று அதிகாலை 3 மணியளவில் செட்டிகுளத்தின் கரையில்,  நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத 2 பேரில் ஒருவர், திடீரென நாட்டுத்துப்பாக்கியால் ராகேஷ்குமாரை நோக்கி குறி பார்த்து சுட்டார். இதில் குண்டுகள் மார்புக்கு கீழே விலாப்பகுதியில் பாய்ந்து, ராகேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். உடனே இருவரும் டூவீலரில் தப்பிச் சென்றனர். உடன் இருந்த நண்பர்களுக்கு முதலில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பின்னர் அதிர்ச்சியடைந்த அவர்கள், ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த ராகேஷ்குமாரை, டூவீலரிலேயே அமர வைத்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி, எஸ்பி சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் வழக்கு பதிந்து ராகேஷ்குமாரின் நண்பர்களிடமும் விசாரித்தனர். ஏஎஸ்பி அருண் கபிலன் தலைமையில் 5 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் - நத்தம் சாலையில் குற்றவாளிகள் மறைந்து இருப்பதாக தனிப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார், மறைந்திருந்த மேற்கு மரியநாதபுரத்தை சேர்ந்த பிரகாஷ் (36), மரியபிரபு (37), ஜான் சூர்யா (27), பாலகிருஷ்ணபுரத்தை சேர்ந்த கணேசமூர்த்தி (23) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ஏற்கனவே செட்டிகுளத்தை குத்தகைக்கு எடுத்து மீன்பிடி தொழில் செய்து வந்தனர். புதிதாக ராகேஷ்குமாரின் தந்தை குத்தகை எடுத்ததை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதுதொடர்பாக 6 மாதங்களாக ராகேஷ்குமாரிடம் பிரச்னை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நாட்டு துப்பாக்கியை சொந்தமாக தயாரித்து சுட்டுக்கொலை செய்ததாக தெரிவித்தனர். தகவலறிந்து தென்மண்டல ஐஜி அன்பு சம்பவ இடத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  ‘‘குளத்தில் மீன் குத்தகைக்கு எடுத்து தொழில் செய்வதில் ஏற்பட்ட போட்டி காரணமாக இந்த கொலை நடந்துள்ளது. சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளிடம் இருந்து 2 அரிவாள்கள், நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : Dindigul , Dindigul fishing pond lease dispute: 4 shot dead, 4 arrested in 12 hours
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...