பாக். பிரதமர் இம்ரான் மாஜி மனைவி கார் மீது பயங்கர துப்பாக்கிச்சூடு; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு 3 மனைவிகள். இதில், 2வது மனைவி ரீஹம் கானை 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இம்ரான், அடுத்த ஆண்டே விவாகரத்து செய்தார். இங்கிலாந்து, பாகிஸ்தான் இரட்டை குடியுரிமை பெற்ற ரீஹன் கான் பத்திரிகையாளர், சமூக சேவகர் என பல்வேறு துறைகளில் உள்ளார். விவாகரத்துக்குப் பிறகு இவர் இம்ரானை தொடர்ந்து சாடி வருகிறார். இம்ரானின் ஆட்சி குறித்தும் பல்வேறு புகார்களை கூறி வருகிறார்.

இந்நிலையில், ரீஹம் கான் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இஸ்லாமாபாத்தின் ஷாம்ஸ் காலனி பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது திடீரென பைக்கில் வந்த 2 நபர்கள் காரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் தன்னுடன் வந்த மற்றொரு காருக்கு ரீஹம் கான் மாறி உள்ளார். துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட அவரது காரில் பாதுகாவலரும், டிரைவரும் மட்டும் இருந்துள்ளனர்.

இதனால் ரீஹம் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். இத்தகவல்களை ரீஹம் கான் நேற்று அதிகாலை 1.39 மணி அளவில் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  அதோடு இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு கூட பதியவில்லை என கூறி உள்ளார். மேலும் தனது தொடர் டிவிட்களில் அவர், ‘இது தான் இம்ரான்கானின் புதிய பாகிஸ்தானா? கோழைகள், குண்டர்கள் மற்றும் பேராசைக்காரர்கள் நிறைந்த நாட்டிற்கு வரவேற்கிறோம்’ என இம்ரான் கான் அரசை குறை கூறி உள்ளார்.

Related Stories: