விரைவில் ஆயுதங்களை கொண்டு வரும் வகையில் லடாக்கின் பாங்காங் ஏரியின் குறுக்கே பாலம் கட்டும் சீனா: செயற்கைகோள் புகைப்படம் மூலம் அம்பலம்

புதுடெல்லி: லடாக்கின் பாங்காங் திசோ ஏரியின் குறுக்கே சீனா புதிய பாலம் ஒன்றை கட்டி வருகிறது. இந்த பாலத்தின் மூலம் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிக்கு சீனா தனது படைகளை விரைவாக கொண்டு வந்து சேர்க்க முடியும். இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பிரச்னை கடந்த சில ஆண்டாக தீவிரமடைந்துள்ளது. கடந்த 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலைத் தொடர்ந்து, கிழக்கு லடாக்கில் டெப்சாங் சமவெளியில் இருந்து வடக்கேயும், தெற்கே டெம்சோக் பகுதியிலும் இரு தரப்பிலும் தலா 50,000 வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஓராண்டாக நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து, கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் நடந்த இடத்திலிருந்து 2 கிமீ தொலைவுக்கு படைகளை வாபஸ் பெற ஒப்புக் கொள்ளப்பட்டது. இருப்பினும், சீனா உடனான லடாக் உள்ளிட்ட பல எல்லைகளில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது. இந்த சூழலில் இந்தியாவும், சீனாவும் தங்களது எல்லைப் பகுதிகளை படைகள் விரைவில் சென்றடைவதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் நடந்த இடத்திற்கு அருகே பாங்காங் திசோ ஏரியை கடக்கும் வகையில் சீனா புதிய பாலம் ஒன்றை கட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இத்தகவலை செயற்கைகோள் புகைப்படத்தின் அடிப்படையில் புவிசார் புலனாய்வு நிபுணர் டேமியன் சைமன் என்பவர் வெளியிட்டுள்ளார். அவர் தனது டிவிட்டரில், ‘ஏரியின் குறுக்கே சீனா கட்டும் பாலப் பணிகள் முழுமை அடைந்து வருவதை செயற்கைகோள் புகைப்படங்கள் காட்டுகின்றன’ என கூறி உள்ளார்.

இந்த பாலம் கட்டுவதன் மூலம், சீனா தனது படைகளையும், ஆயுதங்களையும், நவீன பீரங்கிகளையும் எளிதாகவும், மிக விரைவாகவும் இந்திய எல்லைக்கு அருகே நிலை நிறுத்த முடியும். மேலும், இந்தியா, சீனா இடையேயான எல்லைப்பிரச்னை தீரும் வரை சீனா தனது படையை எல்லையில் குவிக்க மேலும் ஒரு வழித்தடமும் அதற்கு கிடைத்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: