×

ஓய்வு பெற்றார் ‘பேராசிரியர்’ ஹபீஸ்

கராச்சி: மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்தவர் முகமது ஹபீஸ் (41). அவர் தலைமையில் விளையாடிய 29 டி20 ஆட்டங்களில் பாகிஸ்தான் 17ல் வென்றுள்ளது. 2003ல் வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்டிலும், ஜிம்பாப்வேக்கு எதிராக ஒரு நாள் போட்டியிலும் அறிமுகமானார். 2006ல் இங்கிலாந்துக்கு எதிராக முதல் டி20ல் களமிறங்கினார்.

2018ல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து மட்டும் ஓய்வு பெற்றார். 2020 உலக கோப்பைக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று கூறியிருந்த நிலையில், கொரோனாவால் டி20 உலக கோப்பை கடந்த ஆண்டு நவம்பவரில் தான் நடந்தது. அதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் விளையாடியதுதான் அவரது கடைசி சர்வதேச ஆட்டம்.

இந்நிலையில், ஹபீஸ் நேற்று தனது ‘ஓய்வு’ முடிவை அறிவித்தார். அவர்  இதுவரை 55 டெஸ்டில்  3651 ரன் மற்றும் 53 விக்கெட், 218 ஒருநாள் ஆட்டங்களில்  6641 ரன், 139 விக்கெட், 119 டி20ல் 2514 ரன், 61 விக்கெட் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரின் முதல் சீசனில்  கொல்கத்தா அணிக்காக விளையாடி உள்ளார். சர்வதேச ஆட்டங்களில் அதிக ரன் குவித்த பாகிஸ்தான் வீரர்கள் பட்டியலில் 4 இடத்தில் உள்ளார். சக வீரர்களுக்கு ஆலோசனை சொல்லி வழி காட்டுவதில் ஆர்வம் காட்டியதால் அணி வீரர்களால் செல்லமாக புரொபசர் (பேராசிரியர்) என அழைக்கப்பட்டு வந்தார். ஓய்வை அறிவித்துள்ள ஹபீசுக்கு   பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Tags : Hafeez , Retired ‘Professor’ Hafeez
× RELATED 166 பேரின் படுகொலைக்கு காரணமானவன்...