தென் ஆப்ரிக்கா அபார பந்துவீச்சு; 202 ரன்னில் சுருண்டது இந்தியா: கேப்டன் ராகுல் அரை சதம்

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது டெஸ்டில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தி வாண்டரர்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், கோஹ்லி காயம் காரணமாக விலகியதை அடுத்து கே.எல்.ராகுல் கேப்டனாக பொறுப்பேற்றார். கோஹ்லிக்கு பதிலாக ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. ராகுல், அகர்வால் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 36 ரன் சேர்த்தனர்.

அகர்வால் 26 ரன் எடுத்து மார்கோ ஜான்சென் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த புஜாரா (3), ரகானே (0) இருவரும் ஆலிவியர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா 49 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. ஹனுமா 20 ரன் எடுத்து ரபாடா வேகத்தில் வெளியேற, பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த ராகுல் (50 ரன், 133 பந்து, 9 பவுண்டரி) மார்கோ வேகத்தில் ரபாடா வசம் பிடிபட்டார்.

ரிஷப் பன்ட் 17, ஷர்துல் 0, ஷமி 9 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்.அஷ்வின் 46 ரன் (50 பந்து, 6 பவுண்டரி) விளாசி மார்கோ வேகத்தில் பீட்டர்சென் வசம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். சிராஜ் 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா முதல் இன்னிங்சில் 202 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (63.1 ஓவர்). பும்ரா 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் மார்கோ ஜான்சென் 4, ரபாடா, ஆலிவியர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா, முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன் எடுத்துள்ளது (18 ஓவர்). மார்க்ரம் 7 ரன் எடுத்து ஷமி பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். கேப்டன் டீன் எல்கர் 11 ரன், கீகன் பீட்டர்சன் 14 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories: