×

நியூசிலாந்துடன் முதல் டெஸ்ட்: வங்கதேசம் முன்னிலை

மவுன்ட் மவுங்கானுயி: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் பொறுப்புடன் விளையாடி ரன் குவித்து வரும் வங்கதேசம், முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றுள்ளது. பே ஓவல் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 328 ரன் குவித்து ஆட்டமிழந்தது. கான்வே 122, நிகோல்ஸ் 75, யங் 52, டெய்லர் 31 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய வங்கதேசம், 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்திருந்தது. ஹசன் ஜாய் 70, கேப்டன் மோமினுல் ஹக் 8 ரன்னுடன் நேற்று 3வது நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

ஹசன் ஜாய் 78 ரன் எடுத்து (228 பந்து, 7 பவுண்டரி) ஆட்டமிழந்தார். மோமினுல் ஹக் ஒரு முனையில் பொறுப்புடன் விளையாட, முஷ்பிகுர் ரகிம்  12 ரன்னில் வெளியேறினார். மோமினுல் - லிட்டன் தாஸ் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 158 ரன் குவித்தனர். அரை சதம் விளாசிய இருவரும் சதமும் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மோமினுல் 88 ரன் (244 பந்து, 12 பவுண்டரி), லிட்டன் 86 ரன் (177 பந்து, 10 பவுண்டரி) எடுத்து போல்ட் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

3ம் நாள் ஆட்ட முடிவில் வங்கதேசம் 6 விக்கெட் இழப்புக்கு  401 ரன் குவித்துள்ளது ( 156 ஓவர்).  யாசிர் அலி 11, மெகதி ஹசன் 20 ரன்னுடன் களத்தில் உள்ளனர். நியூசி. தரப்பில் போல்ட், வேக்னர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். கை வசம் 4 விக்கெட் இருக்க, வங்கதேசம் 73 ரன் முன்னிலையுடன்  இன்று 4வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

Tags : New Zealand ,bangadesh , First with New Zealand: Test Bangladesh lead
× RELATED 2-2 என தொடரை சமன் செய்தது பாக்.