ரவுடிகள், குழந்தை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றவாளிகள் பட்டியல் தயாரிக்க தாம்பரம் கமிஷனர் ரவி உத்தரவு: 4 காவல் நிலையங்களில் அதிரடி ஆய்வு

சென்னை: புதிதாக தொடங்கப்பட்டுள்ள தாம்பரம் கமிஷனர் எல்லைக்குள் உள்ள 4 காவல் நிலையங்களில் கமிஷனர் ரவி நேற்று ஆய்வு செய்தார். அப்போது குற்றவாளிகளின் பட்டியலை தயாரிக்கவும், அவர்கள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டார். சென்னை போலீஸ் கமிஷனரின் எல்லை பகுதிகள் பிரிக்கப்பட்டு தாம்பரம், ஆவடி ஆகிய புதிய காவல் ஆணையரகங்கள் உருவாக்கப்பட்டன. புதிய கமிஷனரகங்கள் கடந்த சனிக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டன. தாம்பரம் கமிஷனராக ஏடிஜிபி ரவி நியமிக்கப்பட்டார். அதில் தாம்பரம் கமிஷனரின் எல்லைக்குள், 20 காவல் நிலையங்கள் உள்ளன.

புதிதாக பதவி ஏற்ற தாம்பரம் கமிஷனர் ரவி நேற்று காலையில் சங்கர்நகர், பல்லாவரம், குன்றத்தூர் மற்றும் மகளிர் காவல்நிலையம் உள்ளிட்ட 4 காவல் நிலையங்களுக்கு திடீரென்று சென்று ஆய்வு செய்தார். அப்போது காவலர்களின் வருகை, பணிகள் ஒதுக்கீடு, ஆட்கள் பற்றாக்குறை ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். பின்னர் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்களுடன் காவல் நிலைய எல்லைகளுக்குள் உள்ள ரவுடிகள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றவாளிகள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை செய்கிறவர்கள், செயின், செல்போன் பறிப்பு குற்றவாளிகளின் பட்டியல்களை புதிதாக தயாரிக்கும்படி கமிஷனர் ரவி உத்தரவிட்டார்.

 மேலும் தொடர் குற்றவாளிகள் சிறையில் இருந்து எப்போது வெளியில் வருகிறார்கள், அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும்படியும், அவர்கள் புதிய குற்றங்களை செய்கிறார்களா என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக் கொண்டார். துணிச்சலான, நேர்மையான நடவடிக்கைகளையே போலீசார் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் புகார் கொடுக்க வந்தால், அவர்களை அமர வைத்து, கனிவுடன் நடத்த வேண்டும். புகார்கள் மீது 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் அருகே கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து புகார்கள் வந்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். பதவி ஏற்ற 2வது நாளில் காவல் நிலையங்களில் தொடர்ந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது காவலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

* தொலைபேசி எண் அறிவிப்பு

பொதுமக்களின் வசதிக்காகவும் குற்ற தடுப்பு நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் கடந்த 1ம் தேதி சென்னை மாநகரில் இருந்து பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து மறைமலை நகர் ஓட்டேரி கூடுவாஞ்சேரி கேளம்பாக்கம் தாழம்பூர் ஆகிய காவல் நிலையங்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து சோமங்கலம் மணிமங்கலம் ஆகிய காவல் நிலையங்களும் சென்னை மாநகர மேற்கு மண்டலத்தில் இருந்து குன்றத்தூர் காவல் நிலையமும், சென்னை மாநகர தெற்கு மண்டலத்தில் இருந்து தாம்பரம், குரோம்பேட்டை பல்லாவரம் சங்கர் நகர் பீர்க்கன்கரணை செம்மஞ்சேரி கண்ணகி நகர் பெரும்பாக்கம் சேலையூர் சிட்லபாக்கம் பள்ளிக்கரணை கானாத்தூர் ஆகிய காவல் நிலையங்களும் உள்ளடக்கி தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது முதல் தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறை செயல்பட தொடங்கியுள்ளது. 8525007100 என்ற தொலை பேசி எண்ணிற்கு பொதுமக்கள் தங்களுடைய  புகார்களை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். அவர்களுடைய புகார் உடனடியாக விசாரிக்கப்படும் என்றும் கமிஷனர் ரவி தெரிவித்தார்.

Related Stories: