சென்னையில் மாணவர்கள் மோதலை கண்காணிக்க தனிப்படை: விதிகளை மீறினால் கைது நடவடிக்கை; போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் மாணவர்கள் மோதல் சம்பவங்களை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், வெளிப்படையாக மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது நேரடி கைது நடவடிக்கை பாயும் என போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மத்திய குற்றப்பிரிவில் சைபர் குற்றங்கள் நில மோசடி, வேலைவாய்ப்பு மோசடி, உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டு மத்திய குற்றப்பிரிவில் சிறப்பாக பணியற்றிய அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார். அப்போது, கடந்த வாரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்களுக்கு வழியமைத்து மருத்துவமனை வரை அழைத்துச் சென்ற சமூக ஆர்வலர் முகமது அலி ஜின்னாவை பாராட்டி வெகுமதி வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பேசியதாவது: ‘‘ சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் மூலம் கடந்த ஆண்டில் பல்வேறு மோசடி வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளது. ‘சிம் ஸ்வாப்’ முறையில் நடைபெற்ற மோசடிகளில் முதல் முறையாக சென்னை காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். மேலும், சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவான வழக்குகள் தொடர்பாக கடந்த ஓராண்டில் மட்டும் பொருளாகவும், பணமாகவும் ரூ.184.4 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டு அவற்றுள் ரூ.122.23 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆழ்வார்பேட்டை தனியார் கண் மருத்துவமனையில் ‘சிம் ஸ்வாப்’ முறையில் ரூ.24 லட்சம் திருடிய குற்றவாளிகளில் 4 பேரை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை தேடி வருகிறோம். அதுமட்டுமல்லாமல் இவ்வழக்கு தொடர்பாக குறிப்பிட்ட சிம் சர்வீஸ் ஆபரேட்டர் நிறுவன அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உள்ளோம். மேலும், பேசிய கமிஷனர், மாணவர்களின் மோதல் சம்பவங்களை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரி தொடங்கும் முன்னதாக கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், மற்றும்  பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறோம். அதையும் மீறி பொது இடங்களில் பிரச்னையில் ஈடுபட்டு மோதிக்கொள்ளும் மாணவர்கள் மீது நேரடியாக கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும்’. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: