டாஸ்மாக் பார் டெண்டர் வெளிப்படை தன்மையுடன் தான் நடந்தது: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

சென்னை: வெளிப்படை தன்மையுடன் தான் டாஸ்மாக் பாருக்கான டெண்டர்கள் கோரப்பட்டன என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதிபட தெரிவித்தார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைமை அலுவலகத்தில் நேற்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் இயக்குநர்கள் மற்றும் தலைமைப் பொறியாளர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, அனைத்து இயக்குநர்கள், தலைமைப் பொறியாளர்கள், தலைமை நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் தலைமையிட அலுவலர்கள் பங்கேற்றனர்.  

பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் மூன்று மாதகாலத்தில் 20,132 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.  வரும் மார்ச் 31ம் தேதிக்குள் ஒரு லட்சம் விவசாயிகள் பயன்பெறக்கூடிய இந்த திட்டம் நிறைவு பெற இருக்கின்றது. டாஸ்மாக் பார் அமைப்பதற்கான விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலம் பெறலாம். யாரு வேண்டுமானாலும் ஆன்லைனில் அப்ளிகேஷன் பதிவிறக்கம் செய்து தங்களுடைய டெண்டர் படிவங்களை பூர்த்தி செய்து அந்த டெண்டரில் கலந்து கொள்ளலாம். மேலும், நேரிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். இரண்டு வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.

மொத்தம் 5,387 கடைகள் இருக்கின்றன. அதில் 2,168 கடைகளில் மட்டும்தான் கடந்த காலங்களில் பார்கள் செயல்பட்டு இருக்கின்றன. மீதம் இருக்கக் கூடிய 1,551 கடைகளில் பார் செயல்படுத்துவதற்கான வசதிகள் இருந்தும் அந்த இடங்களில் முறையான டெண்டர் விடவில்லை.குறிப்பாக 2019ல் நடைபெற்ற டெண்டரில் 5,387 கடைகளுக்கு சேர்த்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் 6,482. இந்த ஆண்டு வெளிப்படையான ஒப்பந்த புள்ளி கோரப்பட்டதின் அடிப்படையில் 11,715 விண்ணப்பங்கள் இதுவரை வரப்பெற்றிருக்கின. 6,400 எங்கே. 11,700 எங்கே.

மேலும், அந்ததந்த டாஸ்மாக் மாவட்டங்களின் இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் / ஒப்பந்தாரர்களின் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, அனைவரும் அதை காணலாம். இவ்வாறு வெளிப்படை தன்மையுடன் தான் டாஸ்மாக் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருக்கின்றன. டெண்டர்கள் எல்லோரின் முன்னிலையில் தான் ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டது. தற்போது டாஸ்மாக் பார்கள் துய்மையாக வைப்பது, இன்னொன்று முழுமையாக அமரும் வசதிகள் ஏற்படுத்துவது. இந்த இரண்டு நிபந்தனைகள் தான் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. மீதி எல்லாம் 2019ல் இருந்த அதே 66 நிபந்தனைகளே.

கூடுதலாக கோவிட் காலத்தையொட்டி இரண்டு நிபந்தனைகள் சேர்த்து 68 நிபந்தனைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஒப்பந்தப்புள்ளி வெளிப்படைத்தன்மையுடன் தான் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதில் எந்தவிதமான ஒளிவு மறைவிற்கும் இடம் கிடையாது. 2016 ம் ஆண்டு விவசாய மின் இணைப்பிற்கு மீட்டர் பொருத்தும் பணிகளை அதிமுக ஆட்சியில் தான் தொடங்கியிருக்கிறார்கள். மின்சாரவாரியத்தின் கடன் ரூ.1,59,000 கோடி. திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் 20,000 மெகாவாட் அளவிற்கு சூரிய மின்சக்தி  திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. முதல் ஆண்டில் மின்சார வாரியம் 4 ஆயிரம் மெகாவாட் அளவிற்க்கு சூரிய மின்சக்தி உற்பத்தி செய்வதற்காக திருவாரூரில் சூரிய மின்சக்தி பூங்கா அமைப்பதற்கு முதல்வர் அறிவித்துள்ளார்.

நிலக்கரி முறைகேடு குறித்து முதற்கட்ட விசாரணையில் 3 லட்சம் டன் நிலக்கரி காணாமல் போயிருந்தது. பதிவேற்றத்திற்கும், இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் குறித்து முழு அறிக்கை வழங்கப்பட்டபின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.ஸ்மார்ட் மீட்டர் மற்றும் டிடி மீட்டர் பொருத்துவதற்கான வேலைகள் செயல்படுத்தப்பட உள்ளன. டாஸ்மாக் பொறுத்தவரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவர்கள் 124 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.   வரக்கூடிய புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: