×

அண்ணா பல்கலை முறைகேடு தொடர்பாக விசாரித்த நீதிபதி குழு விசாரணை அறிக்கை நகலை சூரப்பாவுக்கு வழங்கலாமா? அரசு தெரிவிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணைய அறிக்கை நகலை, அவருக்கு வழங்கலாமா என்பது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை நியமித்து முந்தைய அதிமுக அரசு உத்தரவிட்டது.

இந்த ஆணையத்தின் விசாரணையை எதிர்த்து சூரப்பா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணை அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது. அப்போது, நீதிபதி கலையரசன் ஆணைய அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் சூரப்பா விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தமிழக ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் அதற்காக ஆணைய அறிக்கை ஆளுநருக்கு அனுப்ப உள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை ஆணையத்தின் அறிக்கை நகலை வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதற்கு தங்கள் தரப்பில் அளிக்கும் விளக்கத்தை ஆளுநருக்கு அனுப்பலாம் என சூரப்பா தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து, விசாரணை ஆணையத்தின் அறிக்கை நகலை சூரப்பாவுக்கு வழங்கலாமா என்பது குறித்து விளக்கமளிக்குமாறு தமிழக அட்வகேட் ஜெனரலுக்கு அறிவுறுத்திய நீதிபதி, விசாரணையை திங்கள் கிழமைக்கு தள்ளிவைத்தார்.

Tags : Anna University scandal ,Surappa , Can Surappa be given a copy of the report of the panel of judges investigating the Anna University scandal? Icord order to inform Government
× RELATED தந்தை இறந்த நிலையிலும் 12ம் வகுப்பு...