×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது மனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை வீடியோ பதிவு: மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றை வீடியோ பதிவு செய்ய வேண்டுமென்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 15 மாநகராட்சிகளில் உள்ள 1064 வார்டுகளுக்கும், 121 நகராட்சிகளில் உள்ள 3468 வார்டுகளுக்கும், 528 பேரூராட்சிகளில் உள்ள 8288 வார்டுகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த கோரி அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத கண்காணிப்பு, ஸ்ட்ராங்க் ரூமிலும் கண்காணிப்பு கேமரா போன்ற உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை. வேட்புமனுக்களில் பக்கங்கள் கிழிக்கப்பட்டுள்ளது.எனவே, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமலிருக்க வேட்புமனு, வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் சிவசண்முகம் ஆஜராகி, வேட்புமனுத் தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை ஒவ்வொரு நடவடிக்கையும் வீடியோ பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வேட்பு மனுவின் பக்கங்களை குறிப்பிட்டு ஒப்புகை சீட்டு வழங்க விதிகள் இல்லை. இந்த வழக்கில் விரிவாக பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கோரினார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளதால், வேட்புமனு தாக்கல், தேர்தல், வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றை வீடியோ பதிவு செய்ய வேண்டும். கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : State Election Commission , Video recording from petition to counting of votes during urban local elections: High Court order to the State Election Commission
× RELATED இந்தியாவிலேயே அதிகம் கேரளாவில் தான் இளம் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு