மருத்துவ படிப்பில் ஓபிசி வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டில் ஓரிரு நாளில் இறுதி உத்தரவு?.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்த விசாரணையில் தகவல்

புதுடெல்லி: மருத்துவ படிப்பில் ஓபிசி வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டில் ஓரிரு நாளில் இறுதி உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது. மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை ஒன்றிய அரசு அறிவித்தது. இதற்கு குடும்பத்தின் ஆண்டு வருமான உச்சவரம்பாக ரூ.8 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இவ்வழக்கில், ரூ.8 லட்சம் வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டது குறித்து ஆராய முன்னாள் நிதித்துறை செயலாளர் அஜய் பூஷண் பாண்டே, இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கவுன்சில் உறுப்பினர் செயலாளர் வி.கே.மல்கோத்ரா, அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் ஆகியோரைக் கொண்ட நிபுணர் குழுவை ஒன்றிய அரசு அமைத்தது. இக்குழு கடந்த டிசம்பர் 31ம் தேதி தனது அறிக்கையை சமர்ப்பித்தது. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்தது. அதில், ‘சமூக சமநிலையை ஏற்படுத்தும் வகையில் ரூ. 8 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது நியாயமானதுதான். அதாவது, ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை இருந்தால் அவர்கள் இடஒதுக்கீட்டு சலுகையை பெற தகுதியானவர்கள்.

தற்போது நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இப்போது பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் சேர்க்கைக்கான அளவுகோல்களில் ஏதாவது மாற்றம் செய்தால் தேவையற்ற தாமதத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும். எனவே, இடஒதுக்கீடு பெறுவதற்கான அளவுகோல்களுக்கு நிபுணர் குழு தனது அறிக்கையில் ஏதேனும் மாற்றங்கள், பரிந்துரைகள் செய்தால் அது எதிர்காலத்தில் மட்டுமே அமலுக்கு வரும்’ என்று கூறப்பட்டது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் நீட் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு விரைந்து கவுன்சிலிங்கை நடத்த வலியுறுத்தி டெல்லியில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது போலீசார் தடியடி நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இவ்விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று ஒன்றிய அரசு கூறியதால், மருத்துவர்களின் நாடு தழுவிய போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சந்திரசூட் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான மூத்த அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, ‘10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை அவசர வழக்காக நாளை விசாரிக்க வேண்டும். மருத்துவ கவுன்சிலிங் நடத்த வேண்டியுள்ளதால், இவ்வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

அப்போது நீதிபதி கூறுகையில், ‘உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஆலோசித்து நாளை அல்லது நாளை மறுநாள், 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். ரூ. 8 லட்சம் வருமான வரம்பு நிர்ணயம் தொடர்பாக ஒன்றிய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதால், இதுகுறித்து எதிர்மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது’ என்று உத்தரவிட்டார். இதையடுத்து அடுத்த ஓரிரு நாளில் 10 சதவீத இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் இறுதி உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.

Related Stories: