×

கூடலூர் அருகே 200 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை உடைப்பு: தங்கம் புதையல் தேடிவந்த கும்பல் கைவரிசை?

கூடலூர்: கூடலூர் அருகே 200 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. தங்கம் புதையல் தேடிவந்த கும்பல் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுவதால் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள கீழ் நாடுகாணி வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலையில் சுமார் 2 கி.மீ. தூரத்தில் பள்ளத்தாக்கான வனப்பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் பாறையில் செதுக்கப்பட்ட விநாயகர் சிலை ஒன்று உள்ளது. 8 அடி உயரமும் 3 அடி சுற்றளவும் கொண்ட இந்தப் பாறையில் 3 அடி உயரத்தில் விநாயகர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. 18ம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட இந்த பாறை விநாயகர், 200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.

இப்பகுதி மக்கள் புத்தாண்டு, பொங்கல் தினத்தில் கூட்டமாக சென்று சிலைக்கு வழிபாடு செய்து வந்தனர். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தேவாலா பகுதியில் தங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்ற போது அடையாளத்துக்காக பாறையில் ஆங்கிலேயர்கள் விநாயகர் சிலையை செதுக்கி இருக்கலாம் என்றும், சிலையின் அடியில் தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளதாகவும், அதன் அடையாளமாகவே பாறையில் விநாயகர் உருவத்தை செதுக்கி வைத்துள்ளதாகவும் செவிவழிக் கதையாக பலரும் கூறுவது உண்டு. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இப்பகுதிக்கு உள்ளூர் மக்கள் யாரும் செல்லவில்லை.

இதனையடுத்து, இந்தாண்டு ஜனவரி 1ம் தேதி சிலைக்கு பூஜை செய்வதற்காக நாடுகாணி பகுதியில் இருந்து பொதுமக்கள் சிலர் அங்கு சென்றுள்ளனர். அப்போது, பாறை உடைக்கப்பட்டு விநாயகர் சிலை சேதமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், உடைந்து கிடந்த சிலையை சேர்த்து வைத்து பூஜையும் செய்து திரும்பினர். இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், நேற்று வனத்துறை மற்றும் கூடலூர் போலீசார் அங்கு சென்று ஆய்வு நடத்தினர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பகுதிக்கு யாரும் செல்லாததால் மர்ம நபர்கள் சிலையின் அடியில் தங்கப் புதையலை தேடி பாறையை உடைத்து சிலையை சேதப்படுத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Ganesha ,Cuddalore , 200-year-old Ganesha statue demolished near Cuddalore: Gangs searching for gold treasure?
× RELATED பதினோரு விநாயகர்களின் பரவச தரிசனம்