சபரிமலை வரலாற்றில் முதல் முறையாக ஐயப்பனுக்கு 18 ஆயிரம் நெய் தேங்காய் அபிஷேகம்

திருவனந்தபுரம்: சபரிமலை வரலாற்றில் முதல்முறையாக கர்நாடகாவை சேர்ந்த ஒரு பக்தர், ஐயப்பனுக்கு 18 ஆயிரம் தேங்காய் நெய்யபிஷேகம் நடத்த உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் நடத்துவது என்பது பக்தர்களின் மிக முக்கியமான வழிபாடாகும். பக்தர்கள் தேங்காய்களில் நெய்யை நிரப்பி அதை இருமுடி கட்டில் வைத்து சபரிமலைக்கு செல்வார்கள். 18ம்படி வழியாக ஏறி தரிசனம் செய்த பின்னர் நெய் தேங்காயை உடைத்து நெய்யை பாத்திரத்தில் விடுவார்கள். பின்னர் சுவாமிக்கு அபிஷேகம் செய்ய கொடுப்பார்கள். அபிஷேக நெய் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

பெரும்பாலும் பக்தர்கள் தங்களது இருமுடியில் 1, 2 நெய் தேங்காய்களை தான் கொண்டு வருவார்கள். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பக்தர் ஒருவர் 18 ஆயிரம் தேங்காய் நெய்யபிஷேம் நடத்த உள்ளார். தன்னுடைய பெயரை வெளிப்படுத்த விரும்பாத அந்த பக்தர், 5ம் தேதி 18 ஆயிரம் தேங்காய் நெய்யபிஷேகம் நடத்துகிறார். சபரிமலையில் அதற்காக பல லட்சம் ரூபாய் பணத்தையும் கட்டியுள்ளார். இந்த 18 ஆயிரம் தேங்காய்கள் மற்றும் அதற்கான நெய், லாரி மூலம் நேற்று பம்பைக்கு கொண்டு வரப்பட்டது.

திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்தகோபன் தலைமையிலான ஊழியர்கள் தேங்காய் மற்றும் நெய்ைய பெற்று கொண்டனர். பம்பையில் வைத்து தேங்காய்களில் நெய் நிரப்பபட்டன. அதன் பிறகு நெய் தேங்காய்கள் டிராக்டர் மூலம் நேற்று சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 5ம் தேதி அதிகாலை ஐயப்பனுக்கு 18 ஆயிரம் தேங்காய் நெய்யபிஷேகம் நடத்தப்படுகிறது. சபரிமலை கோயில் வரலாற்றில் ஒரு பக்தர் 18 ஆயிரம் தேங்காயில் நெய்யபிஷேகம் நடத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.

ரூ4.75 கோடி வருவாய்

கர்நாடகா பக்தர் கடந்த பல வருடங்களாக சபரிமலையில் தரிசனம் செய்து வருகிறார். தான் நினைத்த காரியம் நடந்ததற்கு நன்றி செலுத்தவே 18 படிகள், 18 மலைகளை நினைவு படுத்தும் வகையில், 18 ஆயிரம் தேங்காய் நெய்யபிஷேகம் நடத்துவதாக சபரிமலை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார வாரியர் கூறினார். இதற்கிடையே சபரிமலையில் கடந்த 2 நாளில் ரூ.4.75 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் காணிக்கை மூலம் மட்டுமே ரூ.2 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: