×

4 பேர் பணியில் இருந்து நீக்கம்; பைப் உற்பத்தி தொழிற்சாலையில் தொழிலாளர்கள் போராட்டம்: கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு

கும்மிடிப்பூண்டி: தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் பைப்புகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கடந்த 40 வருடங்களாக இயங்கி வருகிறது. இங்கு உள்ளூர்க்காரர்கள் முதல் வடமாநில இளைஞர்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். மேற்கண்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில், பணியாற்றிவரும் நிலையில் சில தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிகிறது.

அத்துடன் கொரோனா காலங்களில் உள்ளூர் ஆட்களுக்கு சரிவர வேலை வழங்கவில்லை என்று தொழிலாளர்கள் பலமுறை நிர்வாகத்திடம் கூறியும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதை கண்டித்து கடந்த 2 மாதங்களுக்கு முன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், வட்டாட்சியர் மகேஷ் ஆகியோர் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேசி மீண்டும் பணியில் அமர்த்தினர். இந்தநிலையில்  எளாவூர் பகுதியை சேர்ந்த சம்பத், செல்வம், மோகன், சரவணன், ஆகியோர் இன்று காலை வேலைக்கு வந்துள்ளனர்.

அப்போது நிர்வாகம் தரப்பில் ‘’ உங்கள் பணிக்காலம் டிசம்பர் 31ம்தேதியுடன் முடிந்துவிட்டது’ என்று கூறி திருப்பி  அனுப்பியுள்ளனர். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிந்ததும் சக தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் தொழிற்சாலை முன்பு கண்டன கோஷங்கள் எழுப்பியபடி முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. இதுபற்றி அறிந்ததும் ஆரம்பாக்கம் போலீசார் மற்றும் வட்டாட்சியர் மகேஷ் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள், ‘’ தொழிற்சாலை நிர்வாகம் அடிக்கடி தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வது தொடர்ந்துகொண்டிருக்கிறது.

எனவே, நிர்வாக இயக்குனர் நேரில்வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’’ என்றனர். ‘’ உங்கள் பிரச்னை சம்பந்தமாக விசாரிக்க பீஸ் கமிட்டி அமைத்து முடிவெடுக்கலாம்’’ என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதன்காரணமாக எளாவூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags : Gummidipoondi , 4 fired; Workers protest at a pipe manufacturing factory: a riot near Gummidipoondi
× RELATED ஆந்திரா அரசு பேருந்தில் கடத்தி வந்த 9 கிலோ கஞ்சா பறிமுதல்