சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே போட வேண்டும்!: ஒன்றிய சுகாதாரத்துறை மீண்டும் அறிவுறுத்தல்..!!

டெல்லி: நாடு முழுவதும் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ள நிலையில், அவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்த வேண்டும் என ஒன்றிய சுகாதாரத்துறை மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் 15 முதல் 18 வயதுள்ள சிறார்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என நரேந்திர மோடி கடந்த மாதம் 25ம் தேதி அறிவித்தார். இதற்கான முன்பதிவு கோவின் இணையதளத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. மேலும், கோவாக்‍ஸின் தடுப்பூசியே சிறார்களுக்‍கு போடப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. அதன்படி இன்று காலை முதல் நாடு முழுவதும் 15-18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடக்கி வைத்தனர். இந்தியா முழுவதும் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 10 கோடி பேர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மதியம் 3 மணி நிலவரப்படி 13 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 15 முதல் 18 வயதக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், 18 வயதுக்‍கு மேற்பட்டவர்கள் அனைத்து தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் மற்றும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: