‘’ஹீமாயூன் மஹால்” கட்டிட புனரமைப்பு பணியை விரைந்து முடிக்க அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனை

சென்னை: பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் இன்று காலை, சென்னை சேப்பாக்கத்தில் தீயினால் சேதமடைந்த ‘’ஹீமாயூன் மஹால்” கட்டிடத்தினை புனரமைக்கு பணியை ஆய்வு செய்து, பணிகள் விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.

சென்னை, சேப்பாக்கத்தில் சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதான கட்டிடம் ‘’ஹீமாயூன் மஹால்” வாலாஜா சாலையில் அமைந்துள்ளது. ஹீமாயூன் மஹால் கட்டிடம் ஆற்காடு நவாப் முகமது அலிக்கான் வாலாஜா என்பவருக்காக ஆங்கிலேய கட்டட கலைஞர் பால்பென் பீல்டு அவர்களால், 1764-1768-ல் தரைத்தளம் மட்டும் வடிவமைப்பு செய்யப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.

பிறகு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டிட கலைஞர் இராபர்ட் செஸ்ஸோம் அவர்களால் 1868-1871-ல் இந்தோ-சராசனிக் கட்டிடக்கலை நயத்துடன் ஹீமாயூன் மஹாலின் முதல்தளம் வடிவமைப்பு செய்யப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டிடம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னை மாகாண ‘’வருவாய் வாரிய தலைமை அலுவலகமாக” செயல்பட்டு வந்தது. புதிய எழிலகம் கட்டிடம் கட்டப்பட்ட பின், இந்த கட்டிடத்தில் தமிழக அரசின் வேளாண்மை இயக்குநரகம், தோட்டக்கலைத்துறை, போக்குவரத்துத்துறை, வருவாய்த்துறை மற்றும் கைரேகை ஆய்வியல்துறை தொடர்பான பல அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. மேலும், 2005-ம் ஆண்டு முதல் கட்டிடத்தின் சிரத்தன்மையில்லாத காரணத்தினால், இந்த பழமையான கட்டிடம் பயன்பாட்டில் இல்லாமல், பராமரிப்பின்றி இருந்து வந்தது.

2012-ம் ஆண்டு தீ விபத்தில் பாதிக்கப்பட்டு கீழ்த்தளம் முற்றிலும் எரிந்து விழுந்த 2 நிலையிலும், முதல்தள கூரைகள் இடிந்து மிகவும் மோசமான நிலையிலும், மரங்கள் மற்றும் செடிகள் வளர்ந்து பாழடைந்து இருந்தது. வரலாற்று சிறப்பு மிகுந்த தமிழ்நாட்டின் பாரம்பரிய கட்டடங்களை பாதுகாத்து புனரமைப்பு செய்யும் பொருட்டு, மாண்புமிகு நீதியரசர் பத்மநாபன் தலைமையில் 2007-ல் ஏற்படுத்தப்பட்ட குழுவினரால், ஹீமாயூன் மஹால் கட்டடம் முதல்வகை புராதான கட்டிடமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் வரலாற்று முக்கியம் வாய்ந்த முதல் புராதான இந்தோ-சராசனிக் கட்டிடக்கலை கட்டடமாகும்.

இத்தகைய தொன்மைவாய்ந்த புராதான கட்டிடம் ஆதலால், இக்கட்டடத்தினை புனரமைப்பு செய்து மறுசீரமைத்திட தமிழ்நாடு அரசால், ரூபாய் 41.12 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.

இக்கட்டிடம், மெட்ராஸ் நாட்டு தளக்கூரை (Madras Terrace Roof), கூடிய செங்கல் சுவர், சுண்ணாம்பு பூச்சு மற்றும் தேக்குமர உத்தரம், கதவுகள், செங்கல் தூண்களால் ஆன கட்டிடம். இக்கட்டிடத்தில், மிகவும் பழமை வாய்ந்த தீர்வை பூச்சு (Thervai Plastering) முறையிலான சுண்ணாம்பு பூச்சு கலவை உட்புற சுவர்களுக்கு பாரம்பரிய முறையில் பூச்சு வேலை செய்து புனரமைக்கப்பட்டு வருகிறது.

இக்கட்டிடத்தின் முகப்பில் மேற்குப்புறம் முன்று பெரிய குவிமாடம், உயர் கோபுரம், உயர் வளைவு நுழைவு வாயில் மற்றும் உள்ளார்ந்த வேலைபாடுகளுடன் கூடிய தேக்கு மரத்தினால் ஆன மரப்படிகள் நான்கு புறமும் அமைந்துள்ளது.

இக்கட்டிடத்தின் தரைத்தளம் 3910 சதுர மீட்டர் (42090 சதுர அடி)

முதல்தளம் 2849 சதுர மீட்டர் (30673 சதுர அடி)

இரண்டாம் தளம் 354 சதுர மீட்டர் (3803 சதுர அடி)

மொத்த பரப்பளவு 7113 சதுர மீட்டர் (76567 சதுர அடி)

இக்கட்டிடத்தின் தரைத் தளத்தில் ஒன்பது நீண்ட பொது அறைகள் மற்றும் முதல்தளத்தில் நான்கு பொது அறைகள் (Halls)  மற்றும் நான்கு புறமும் நடைபாதை தாழ்வாரங்கள் மற்றும் முதல் தளத்தில் திறந்தவெளியில் (Open to Sky) நான்கு புறமும் சீமை ஓடுகளுடன் கூடிய சாய்தளக்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தளத்தில் ஒரு பொது அறை சீமை ஓடுகளால் வேயப்பட்ட சாய்தளக்கூரையுடன் அமைந்துள்ளது. இக்கட்டிடத்தில் தரை மற்றும் முதல் தளத்தில் மொத்தம் 108 எண்ணிக்கையிலான இரண்டு தட்டு அடுக்கு மிகப்பெரிய தேக்கு மரக்கதவுகள் ஒரு அடுக்கு லூவர்டு (Louvered) கதவும் மற்றொரு அடுக்க கண்ணாடியினால் ஆன கதவுமாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இக்கட்டிடத்தில் செங்கற்கள் மற்றும் கருங்கற்களால் ஆன வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது, 85 விழுக்காடு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மேலும், பணிகள் துரிதப்படுத்தப்பட்டு 31.08.2022-ற்குள் அனைத்து பணிகளையும் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலர்கள் மற்றும் ஒப்பந்தாரர்களுக்கு அறிவுறுத்தினார்கள் பிறகு செய்தியாளர்களை சந்தித்தப்போது, தமிழ்நாட்டில் பாரம்பரிய மற்றும் புராதான பழமை வாய்ந்த கட்டிடங்கள் பொதுப்பணித்துறையின் மேற்பார்வையில் 85 கட்டிடங்கள் உள்ளது.  அதில், முதல் கட்டமாக 35 கட்டிடங்கள் சுமார் ரூ.150 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்த ஆய்வின் போது, மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களுடன், பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.தயானந்த் கட்டாரியா, இ.ஆ.ப., பொதுப்பணித்துறை, தலைமைப் பொறியாளர் திரு. எம்.விஸ்வநாத், கண்காணிப்புப் பொறியளார். திரு.எம்.வாசுதேவன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: