×

ஈரோடு காய்கறி வியாபாரியிடம் ரூ.2 கோடி மோசடி!: தலைமறைவாக இருந்த அதிமுக பிரமுகர் மகன் கைது..!!

ஈரோடு: ஈரோட்டில் காய்கறி வியாபாரிகளிடம் 2 கோடி ரூபாய் பணம் வசூலித்து மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக பிரமுகரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமைறைவாக உள்ள 11 பேரை தேடி வருகின்றனர். ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி சந்தையில் வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுக்கு வீட்டு மனை தருவதாக கூறி 2 கோடி ரூபாய் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக அச்சங்கத்தின் நிர்வாகிகளான அதிமுக பிரமுகர்கள், அவர்களது மனைவிகள், மகன்கள் உள்ளிட்ட 11 பேர் மீது ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் சங்க பொருளாளர் வைரவேல் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட நிலையில், மற்ற 10 பேரும் தலைமறைவாகினர்.

போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில், சங்க தலைவரும், அதிமுக நிர்வாகியுமான பி.பி.கே. பழனிச்சாமியின் மகன் வினோத்குமாரை போலீசார் இன்று கைது செய்தனர். விசாரணைக்கு பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார். வியாபாரிகளுக்கு வீட்டு மனை வழங்குவதற்காக சித்தோடு அருகே வாங்கிய 20 ஏக்கர் நிலத்தை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் 5 பேரும் தங்கள் பெயரிலும், தங்கள் மனைவிகள் பெயரிலும் பத்திரப்பதிவு செய்ததுடன் கடந்த மாதம் வியாபாரிகளுக்கு தெரியாமல் அந்த நிலத்தை 12 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Erode Vegetable Dealer , Erode vegetable trader, fraudster, son of AIADMK leader, arrested
× RELATED வெங்கத்தூர் கண்டிகை துலுக்கானத்தம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா