'தமிழகத்தில் டாஸ்மாக் பார் டெண்டரில் எந்த ஒளிவு மறைவும் இல்லை'!: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

சென்னை: டாஸ்மாக் பார் டெண்டரில் எந்த ஒளிவு மறைவும் இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். பார் டெண்டர் குறித்து எழுந்த முறைகேடு புகார் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த அவர், தமிழ்நாட்டில் டாஸ்மாக் பார்களுக்கான டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. டெண்டர்களை எடுப்பவர்கள் ஆன்லைனிலும், நேரிலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு 5,387 கடைகளுக்கான பார் டெண்டருக்காக 6,482 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டன. தற்போது வெளிப்படையான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதன் அடிப்படையில் இதுவரை 11.715 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இருந்த அதே 66 விதிமுறைகளை பின்பற்றியே டாஸ்மாக் பார்களுக்கு டெண்டர் கோரப்பட்டன.

வெளிப்படைத்தன்மையுடனே டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. அரசியல் உள்நோக்கத்துடன் களங்கம் கற்பிக்கும் நோக்கில் சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர், 1581 கடைகளில் பார் அமைக்க இடவசதி இருந்தும் டெண்டர் விடப்படவில்லை. கடந்த ஆட்சியில் டெண்டர் விடாமலேயே சில கடைகளில் பார் நடத்த முறைகேடாக அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த ஆட்சியில் அரசுக்கு அதிகளவு இழப்பு ஏற்பட்டது. தற்போது கடந்த காலத்தில் டெண்டர் விடப்படாத பார்களுக்கும் டெண்டர் கோரப்பட்டுள்ளது. நில உரிமைக்கான சான்றிதழ் மட்டும் வைத்துக்கொண்டு டெண்டர் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், மொத்த விதிகளையும் பூர்த்தி செய்தவர்களுக்கே டெண்டர் விடப்படும் என்று குறிப்பிட்டார்.

Related Stories: