×

தஞ்சை மாவட்டத்தில் அதிக அளவாக 22 செமீ பதிவு பேராவூரணியில் வெளுத்து வாங்கிய மழை-தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு

பேராவூரணி : பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றுமுன்தினம் மாலை முதல் அதிகாலை வரை பெய்த பலத்தமழையால், மாவட்டத்திலேயே அதிக அளவாக 22.2 சென்டிமீட்டர் மழை பதிவானது.இடைவிடாத தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. மேலும் தற்போது பயிரிடப்பட்டிருந்த நெல் பூக்கும் தருவாயில் கனமழை காரணமாக பதறாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த கதிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கிகிடப்பதால் அறுவடை செய்யமுடியாத நிலை உள்ளது. ஏக்கருக்கு 20, ஆயிரம் முதல் 30, ஆயிரம் வரை விவசாயிகள் செலவிட்டிருந்த நிலையில் தற்போது பெய்த மழை காரணமாக கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். பேராவூரணி அறந்தாங்கி சாலையில் உள்ள காட்டாற்று தரைப்பாலத்திற்கு மேல் இரண்டடி உயரத்துக்கு தண்ணீர் மிதந்து செல்வதால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் அந்தப் பகுதியில் போக்குவரத்துக்குதடை விதித்து தடுப்பு அரண் அமைத்து உள்ளனர்.

பூக்கொல்லை சாலையிலுள்ள காட்டாற்றில் குப்பைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் புகும் அபாயம் ஏற்பட்டது, இதையடுத்து எம்எல்ஏ அசோக்குமார் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, அதிகாரிகளை வரவழைத்து பொக்லைன் இயந்திரம் மூலம் அடைப்பை சரி செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து ஆவணம் வேட்டைக்காரன் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளில் பார்வையிட்டு பொது மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் செங்கமங்கலம், அம்மையாண்டி பகுதியில் மழைநீர் புகுந்து பாதிக்கப்பட்டிருந்த நெல் பயிருகளை பார்வையிட்டு அப்பகுதி விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

வாத்தலைக்காடு பகுதியில் வீட்டின் கூரைசரிந்து விழுந்து படுகாயமடைந்து புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜனார்த்தனன் (71) என்பவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.பேராவூரணியை சுற்றியுள்ள பெரியகுளம், கண்டிக்குளம், சித்தாதிக்காடு குளம் உள்ளிட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சி அளிக்கிறது. பேராவூரணி சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் மார்கழி மாதத்தில் கடலை, உளுந்து, எள், உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்வது வழக்கம். தற்போது பெய்த மழையால் முளைக்கும் நிலையிலேயே பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் பகுதிகளில் நேற்றுமுன்தினம்  காலை விட்டுவிட்டு கனமழை பெய்தது. தொடர்ந்து 6 மணிக்கு மேல் மிகக்கனமழை இரவு  முழுதும்  தொடர்ந்து பெய்தது. இதனையடுத்து மழவேனிற்காடு கிராமத்தில் உள்ள சில வீடுகளுக்குள்ளும், நடுவிக்காடு காளியம்மன் கோவில் பின்புறம் உள்ள வீடுகளிலும் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

இதேபோல அதிராம்பட்டினம் பகுதியில் பிலால் நகர், ஹாஜா நகர், முத்தம்மாள் தெரு, பழஞ் செட்டித் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும் தம்பிக்கோட்டை மறவக்காடு கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த  நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் உள்ளநெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. பிலால் நகர் பகுதியில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்படாமல் இருந்து வருவதால் ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் திடீரென கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.


Tags : Peravurani ,Tanjore district , Peravurani: Heavy rains lashed Peravurani and surrounding areas from evening to early morning yesterday.
× RELATED பேராவூரணி அருகே 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு