×

15 முதல் 18 வயதிற்குட்பட்ட 24 ஆயிரத்து 342 சிறுவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி-சுகாதார பணிகள் துணை இயக்குநர் தகவல்

ஊட்டி : நீலகிரியில் 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட 24 ஆயிரத்து 342 சிறுவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்காக 90 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிகள் துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றிற்கு எதிரான ஒரே ஆயுதமாக தடுப்பூசி உள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவக்கப்பட்டது.

முதற்கட்டமாக மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது. தொடர்ந்து 60 மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டது. அதன் பின் தற்போது தகுதி வாய்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒமிக்ரான் எனப்படும் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வர கூடிய சூழலில் 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று 3ம் தேதி முதல் துவங்குகிறது.

நீலகிரி மாவட்டத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, தனியார் பள்ளிகள் என 212 பள்ளிகள் உள்ளன. இங்கு 15 வயது முதல் 18 வயது உடைய மாணவ, மாணவியர்கள் 24 ஆயிரம் பேர் உள்ளனர். 2007ம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு பிறந்து இருக்க வேண்டும். ஆதார் எண் அல்லது பள்ளி அடையாள அட்டை எண்ணை கோவின் என்ற இணையதளத்தில் பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுச்சாமி கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட 24 ஆயிரத்து 342 சிறுவர்கள் உள்ளனர். அவர்களுக்கு படிக்கும் பள்ளிகளிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக டாக்டர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் அடங்கிய 90 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் பள்ளிகளில் முகாமிட்டு மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவார்கள்.

நீலகிரியில் 2 நாட்களுக்குள் 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. நீலகிரியில் பொதுமக்களுக்கு முதல் தவணை 99.5 சதவீதம், 2வது தவணை 97 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டது. நாள்தோறும் 1200 முதல் 1500 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு ஆர்டிபிசிஆர்., பரிசோதனை செய்யப்படுகிறது. காய்ச்சல் அறிகுறி தென்படும் நபர்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. வெளியிடங்களுக்கு சென்று வருகிறவர்கள் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நீலகிரியில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது, என்றார்.

Tags : Deputy Director of ,Corona Vaccine-Health Services , Ooty: 24 thousand 342 children between the ages of 15 and 18 in the Nilgiris will be vaccinated against corona from today. 90 for this
× RELATED சுகாதார பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்