வேலூர் மாவட்டத்தில் 505 இடங்களில் சிறப்பு முகாமில் 38 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் 505 இடங்களில் நேற்று சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் 38 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இருப்பினும் தொடர் முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு தளர்வு அமலில் உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பை முற்றிலும் தடுக்கும் விதமாக, அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் சனிக்கிழமை மற்றும் வியாழக்கிழமை தோறும் தடுப்பூசி முகாம்கள் நடந்து வந்தது. இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு என்பதால் சனிக்கிழமை தோறும் நடந்த சிறப்பு தடுப்பூசி முகாம் இரு வாரங்களுக்கு மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது.

சிறப்பு முகாம் மட்டுமின்றி தினமும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரேஷன் கடைகள், ரயில் நிலையங்கள் உட்பட 505 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.

காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம் இரவு 7 மணி வரை நடந்தது. இந்த முகாமில் 38,459 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.அணைக்கட்டு: அணைக்கட்டு தாலுகாவில் அணைக்கட்டு, பள்ளிகொண்டா, ஒடுகத்தூர், ஊசூர், அகரம் உள்ளிட்ட உள்வட்டங்களில் 67 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்தது. அந்த பகுதிக்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை சேர்ந்த மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு முதல், 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தினர்.

பள்ளிகொண்டா சுற்றியுள்ள பகுதியில் நடந்த தடுப்பூசி முகாம்களை சுகாதார பணிகள் துணை இயக்குனர் பானுமதி ஆய்வு செய்தார். அதேபோல் அணைக்கட்டு அடுத்த ஏரிப்புதூரில் அரசு பள்ளியில் நடந்த முகாமை எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.அப்போது அணைக்கட்டு ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன், துணை தலைவர் சித்ரா குமாரபாண்டியன், ஊனைவாணியம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் கீதா வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் அறிவழகன், கணபதி, ஒடுகத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் கைலாசம் ஆகியோர் உடனிருந்தனர்.

ஒடுகத்தூர்: ஒடுகத்தூர் பேரூராட்சியில் அம்பேத்கர் நகர், பஸ் நிலையம், சந்தைமேடு போன்ற பகுதிகளில் நடந்த முகாம்களை தாசில்தார் பழனி ஆய்வுசெய்தார். அப்போது, தடுப்பூசிகள் இருப்பு உள்ளதா?, இதுவரை எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்ற விவரங்களை கேட்டறிந்தார். ஆய்வின்போது, ஆர்ஐ நந்தகுமார், விஏஓ சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: