×

அறநிலையத்துறையால் மூடப்பட்ட கோயில் குளம் மீண்டும் திறப்பு: நங்கநல்லூரில் பரபரப்பு

ஆலந்தூர்: நங்கநல்லூரில் அனுமதியின்றி திறக்கப்பட்டதாக கூறி அறநிலையத்துறையால் மூடப்பட்ட கோயில் குளம், அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. நங்கநல்லூரில் பனச்சி அம்மன் கோயில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ேகாயிலின் குளம், முறையான பராமரிப்பின்றி காணப்பட்டது. இந்நிலையில், நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் இந்த குளத்தை புனரமைக்க அரசு முடிவு செய்தது. அதன்பேரில், குளத்தை தூர்வாரி, படித்துறை, நடைமேடை மற்றும் சிறுவர் பூங்காவுடன் புனரமைக்கப்பட்டது.

இதற்கான பணிகள் முடிந்த நிலையில், ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் முன்னிலையில், டி.ஆர்.பாலு எம்பி கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். இந்நிலையில், தங்களின் அனுமதியின்றி கோயில் குளத்தினை திறந்ததாக கூறி, அறநிலையத்துறை அதிகாரி ரேணுகாதேவி உத்தரவின்பேரில், கோயில் நிர்வாக அதிகாரி சக்தி, குளத்தின் பிரதான கேட்டினை மூடி, பூட்டு போட்டார். தகவலறிந்த ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக செயலாளர் என்.சந்திரன், வட்ட செயலாளர் நடராஜன் தலைமையில் திமுகவினர் சம்பவ இடத்திற்கு வந்து, அறநிலையத் துறை அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுபற்றி ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் அறநிலையத்துறை அதிகாரியை தொடர்பு கொண்டு, குளத்தை புனரமைக்கும் பணிகளை வேடிக்கை பார்த்துவிட்டு, திறப்பு விழா நடந்து முடிந்த பிறகு, அனுமதி பெறவில்லை எனக்கூறி, குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாதபடி மூடுவது நியாயமில்லை. உடனே அதை திறக்க வேண்டும், என தெரிவித்துள்ளார். இதனையடுத்து திமுக நிர்வாகிகள் முன்னிலையில் கோயில் குளத்தின் பிரதான கேட் மீண்டும் திறக்கப்பட்டது. இச்சம்பவத்தால், அந்த பகுதியில் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Temple pond ,Treasury Department ,Nanganallur , Charity Department, Temple Pond, Nanganallur,
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...