×

புத்தாண்டை முன்னிட்டு பைக் சாகசத்தில் ஈடுபட்டவர் கைது

சென்னை: புத்தாண்டு இரவு கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் சிசிடிவி பதிவுகள் உதவியுடன் கைது செய்தனர். கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த ஆண்டு பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தமிழக அரசு தடை விதித்தது. மேலும், தடையை மீறி மெரினா உள்ளிட்ட கடற்கரையில் ஒன்று கூடும் பொதுமக்களை கட்டுப்படுத்தவும், பைக் ரேசில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையிலும், கடந்த 31ம் தேதி இரவு முதல் அதிகாலை வரை போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும், 31ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அவசர தேவைக்கான வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

பிற வாகனங்களுக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. போலீசாரின் கடும் கட்டுபாடுகளை மீறி 31ம் தேதி இரவு புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு, கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கம், பிராத்தனா திரையரங்கம் அருகில் ஒரு இளைஞர் மட்டும் தனது பைக்கில் அதிவேகமாகவும், வீலிங் செய்து சாகசத்திலும் ஈடுபட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில், தரமணி எம்.ஜி.ஆர். நகர்  அம்பேத்கர் தெருவை சேர்ந்த விஜயன் (28) என தெரியவந்தது. அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : New Year , New Year, bike adventure, arrest
× RELATED விருத்தகிரீஸ்வரர் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி