கிழக்கு கடற்கரை சாலையில் 1.50 கி.மீ. 6 வழிச்சாலையாக மாற்ற ரூ.17.16 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: திருவான்மியூர்  முதல் அக்கரை வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும்  பணி வேகமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் 9 ஆண்டுகளுக்க பிறகு நிலம் கையகப்படுத்தப்பட்ட பாலவாக்கம் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் 1.50 கி.மீ நீளத்துக்கு 6 வழிச்சாலையாக மாற்ற ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையின் பிரதான சாலைகளில் ஒன்றாக கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. சென்னையில் இருந்து, புதுச்சேரி வழியாக செல்ல, வாகன ஓட்டிகள், இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். மேலும், பொழுதுபோக்கு மையங்கள், வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ளதால், இந்த சாலையில், எந்நேரமும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். நான்கு வழியான இந்த சாலையில், அடிக்கடி விபத்து நடக்கிறது.

நெரிசலால், பயண நேரமும் அதிகரிக்கிறது. இதனால், ஆறு வழி சாலையாக மாற்ற, 2006ம் ஆண்டு, தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து, திருவான்மியூர் ஆர்.டி.ஓ., அலுவலக சந்திப்பில் இருந்து, அக்கரை வரை, 12 கி.மீ., துாரத்தை, ஆறு வழியாக மாற்றும் பணி, கடந்த 2012ல் துவங்கியது. இதற்காக, நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது மற்றும் சாலை பணிக்கு ரூ.778 கோடி நிதியை, அரசு ஒதுக்கியது. மேலும், இந்த பகுதியில், 40 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் உள்ளன. நூறடி அகலம் கணக்கிடப்பட்டு, நிலம் எடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக பாலவாக்கம் பகுதியில் மட்டும்  நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வந்தது.

இந்த வழக்கு நெடுஞ்சாலைத்துறைக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை தொடர்ந்து, 9 ஆண்டுகளுக்கு பிறகு  நில எடுப்பு பணிக்காக நிதியை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டன. இதையடுத்து, பாலவாக்கம் பகுதியில், 1.50 கி.மீ., துாரத்தில், நுாறடியாக சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக, ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது  குறித்து நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அரசணையில் கூறியிருப்பதாவது:

திருவான்மியூர் முதல் அக்கரை வரை கிழக்கு கடற்கரை சாலையை ஆறு வழிச்சாலையாக தரம் உயர்த்துவதற்கு ரூ.778 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதி வழங்கப்பட்டன. எல்பி சாலை முதல் கிழக்கு கடற்கரை சாலை (திருவான்மியூர்  ஜங்கஷன் வரை) ரூ.219 கோடியில் உயர் மட்ட பாலம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவான்மியூர் தொடங்கி கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லூர் வழியாக அக்கரை வரை நிலஎடுப்பு பணிகள் பல்வேறு நிலைகளில் முடிக்கப்பட்டன. இந்த நிலையில் பாலவாக்கம் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்தும் பணிக்காக நிலம் கையகப்படுத்த இழப்பீடு சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு கடந்த ஜனவரியில் வழங்கப்பட்டன.

இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை பாலவாக்கம் கிராமத்துக்குட்பட்ட கி.மீ 13/615 முதல் 14/550 கி.மீ வரை கிழக்கு கடற்கரை சாலை 6 வழிச்சாலை விரிவாக்க பணிக்கு ரூ.17.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. நடப்படாண்டில் ரூ.2 ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ரூ.13.55 கோடியில் கட்டுமான பணிக்கும், அறிவிப்பு பலகை  ரூ.15 லட்சம், விளக்கு அமைக்க ரூ.30 லட்சம், செடிகள் வைக்க ரூ.15 லட்சம் உட்பட பல்வேறு பணிகளுக்கு என மொத்தம் 17.16 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்தவுடன் அங்கும் 6 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: