மின்வாரியத்தில் ஊழியர்களின் வருகைப்பதிவு முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் அறிமுகம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழக மின்சார வாரியத்தில், இன்று முதல் முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம் வருகைப் பதிவு செய்யும் முறை நடைமுறைக்கு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை, அண்ணா சாலையில் தமிழக மின்வாரியத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தினமும் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டு வந்த னர். பிறகு கை விரல் மூலமாக வருகையை பதிவு செய்யபட்டது. பின்னர் கொரோனா வால் இம்முறை தற்காலிகமாக நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக பழைய முறையான நோட்டில் கையெழுத்திட்டு தங்களது வருகையை பதிவு செய்யும் முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன்படி தற்போது பணிக்கு வரும் ஊழியர்கள் தினசரி வருகை பதிவு நோட்டில் கையெழுத்திட்டு தங்களது வருகை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில்  மின்வாரியத்தில் முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம் வருகைப் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்காக சென்னை, மின்வாரிய தலைமையகத்தில் சுமார் 12 இடங்களில் இந்தத் தொழில்நுட்பக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அவை முறையே புதிய டிரான்டிரான்ஸ்கோ கட்டிடம்-4, டேட்டா சென்டர்-1, எல்டி சென்டர்-1, விஐபி கேட் அருகில்-1, என்பிகே ஆர்ஆர் கட்டிடம் (மேற்கு பிரிவு அலுவலகம்) - 2, என்பிகேஆர்ஆர் கட்டிடம் மெயின் நுழைவாயில்-3 ஆகிய இடங்களில் இக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.  

இந்தத் தொழில்நுட்பம் மூலமும், வழக்கமான நடைமுறை என்ற இரண்டு வகைகளிலும் ஜன.3ம் தேதி (இன்று) முதல் ஒரு மாத காலத்துக்கு வருகைப் பதிவு மேற்கொள்ளப்படும். இதைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதம் முதல் முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம் மட்டுமே வருகைப் பதிவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து ஊழியர்களுக்கும் தெரிவித்து, முக அடையாளத்தைப் பதிவு செய்ய அறிவுறுத்த வேண்டும் என ஒவ்வொரு பிரிவின் தலைமை அதிகாரிகளுக்கும் மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு கூறினார்.

Related Stories: