ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு மேலும் 4 மருத்துவ கல்லூரிகளை கேட்டு பெற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டிற்கு மேலும் 4 மருத்துவக்கல்லூரிகளை கேட்டுப் பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நாட்டில் 2014ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட கல்லூரிகளில் பல 7 ஆண்டுகளாகியும் இன்னும் அமைக்கப்படாதது அவை அறிவிக்கப்பட்ட நோக்கத்தையே சிதைப்பதாகும். நிலம் இல்லாமல் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க முடியாது என்பதால், இதுவரை அமைக்கப்படாத கல்லூரிகளை பிற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு மாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இதுவரை மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படவில்லை.

இவற்றில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இல்லை என்பதால் அவற்றில் ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் கூடிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அனுமதி கோரலாம். இது குறித்து ஒன்றிய அரசுடன் தமிழக அரசு பேச்சு நடத்த வேண்டும். விருதுநகரில் வரும் 12ம் தேதி நடைபெறவுள்ள 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி இது குறித்த அறிவிப்பு வெளியிடப்படுவதை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: