வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பு 5ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக் கடலில் கடலோரத்தில் நிலவும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 5ம் தேதி வரை இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு: வெப்பச்சலனம் காரணமாகவும், வங்கக் கடல் பகுதியிலும் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. பின்னர் அந்த காற்று சுழற்சி தமிழகத்துக்குள் நுழைந்து மேற்கு நோக்கி நகரத் தொடங்கிய பிறகு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. நேற்று அதிகபட்சமாக தஞ்சாவூர் பகுதியில் 220 மிமீ மழை பெய்துள்ளது.

ஈச்சன்விடுதி 210மிமீ, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை 180 மிமீ, அதிராம்பட்டினம் 160மிமீ, திருமயம், ஆலங்குடி 130மிமீ, புதுக்கோட்டை 120மிமீ மழை பெய்துள்ளது. இது தவிர தேனி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் , வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்தது.

இந்நிலையில், தென் தமிழக கடற்கரையை ஒட்டி 3.6 கிமீ உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக் கடலை ஒட்டிய இலங்கை பகுதியில் 1 கிமீ உயரம் வரை நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். பிற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும். இதே நிலை 5ம் தேதி வரை நீடிக்கும். சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

Related Stories: