×

தாமதம் இல்லாமல் குறித்த நேரத்தில் இயக்கம் இந்தியாவில் சென்னை விமானநிலையம் முதலிடம்: லண்டன் நிறுவனம் தகவல்

சென்னை: சர்வதேச அளவில் 2021ம் ஆண்டில் விமானங்கள் தாமதம் இல்லாமல் குறித்த நேரத்தில் புறப்படுவது பற்றிய கணக்கெடுப்பில், முதல் 20 விமானநிலையங்களின் பட்டியலில் சென்னை விமானநிலையம் 8ம் இடத்தை பிடித்துள்ளது. அந்த பட்டியலில் சென்னையை தவிர இந்தியாவில் உள்ள வேறு விமானநிலையங்கள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் விமான போக்குவரத்து, விமான நிலையங்களின் செயல்பாடுகள்  குறித்த ஆய்வுகளை லண்டனை தலைமையிடமாக கொண்டுள்ள  சிரியம் என்ற நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வுசெய்து வெளியிட்டு வருகிறது.

அந்த நிறுவனம், 2021ல் விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களின் செயல்பாடுகள், விமானங்கள் குறித்த நேரத்தில் புறப்பாடு, வருகை பற்றி விரிவான ஆய்வை நடத்தியுள்ளது. அந்த ஆய்வுபற்றிய அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. 2021ம் ஆண்டில், பெரிய சர்வதேச விமான நிலையங்களில் இருந்து, குறித்த நேரத்தில் விமானங்கள் புறப்பட்டதில், சென்னை விமான நிலையம், 89.32 சதவீதத்துடன், 8வது இடம் பிடித்துள்ளது. மொத்தம் 49  ஆயிரத்து 923 விமானங்கள் சேவை வழங்கி உள்ளன. இதில், 70 வழித்தடங்களில், 81.90 சதவீதம் விமானங்கள் கண்காணிக்கப்பட்டுள்ளன. 28 கோடி இருக்கைகள் என்ற அடிப்படையில், பெரிய விமான நிலையங்களை  கருத்தில் கொள்ளப்பட்டு கணக்கிடப்பட்டுள்ளது.

அதில் ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு விமானநிலையம், விமானங்கள் குறித்த நேரத்தில் புறப்படுவதில் 96.51 சதவீதம் பெற்று முதல் இடத்தில் உள்ளது. சென்னை விமானநிலையம் 89.32 சதவீதம் பெற்று 8 வது இடத்தில் உள்ளது. இந்தியாவில்  சென்னை சர்வதேச விமான நிலையம் மட்டுமே, குறித்த நேரத்தில் விமானப் புறப்பாட்டை உறுதி செய்ததில், சர்வதே அளவில் ரேங்க் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. அந்த ரேங்க் பட்டியலில் முதல் 20 இடங்களில் இந்திய விமானநிலையங்களில் சென்னையை தவிர வேறு எந்த விமானநிலையங்களும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai ,Airport ,India ,London Company Information , Delay, India, Chennai Airport, London Company
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...