இன்று நேரடி விசாரணை தொடங்கும் நிலையில் ஐகோர்ட் பெண் நீதிபதிக்கு கொரோனா

சென்னை: சென்னை ஐகோர்ட்டில் இன்று முதல் நேரடி விசாரணை தொடங்கும் நிலையில், உயர் நீதிமன்ற பெண் நீதிபதி மற்றும் அவரது கணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020 மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த 21 மாதங்களாக ஊரடங்கு தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டுவருகிறது. கொரோனா தொற்று பரவல் குறைந்துவரும் நிலையில் அவ்வப்போது ஊரடங்கில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன.

கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் முக்கிய வழக்குகள் வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடைபெற்று வந்தது.இந்நிலையில், கொரோனா தொற்று பெருமளவில் குறைந்ததையடுத்து வீடியோ கான்பரன்ஸ் மற்றும் நேரடி விசாரணை என்ற கலப்பு முறையில் விசாரணை நடந்து வந்தது. இந்தநிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜன.3ம் தேதி (இன்று) முதல் நேரடி விசாரணை மட்டுமே நடத்தப்படும் என்று உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் கடந்த மாதம் அறிவித்தார்.

இந்தநிலையில் உயர் நீதிமன்ற பெண் நீதிபதிக்கும் அவரது கணவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று முதல் நேரடி விசாரணை தொடங்கும் நிலையில் பெண் நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் உயர் நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: