டெல்டா-ஒமிக்ரான் சுனாமி போல் பரவி வருகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: டெல்டா - ஒமிக்ரான் தொற்று சுனாமி அலைக்கு இணையாக உலகம் முழுவதும்  பரவி  வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்   மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டையில் மெகா தடுப்பூசி முகாம், இலவச மருத்துவ முகாம் உள்ளிட்டவைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கலந்துகொண்டனர்.

பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

கொரோனா தொற்று அதிகரிப்பு என்பது தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. 600 வரையில் இருந்த தொற்று பாதிப்பு ஒருவார காலமாக தொடர்ந்து கூடி வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,489 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் யாராக இருந்தாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட 33 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் பணியினை சைதாப்பேட்டை மாந்தோப்பு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். தமிழகம் முழுவதிலும் பள்ளிகளில் மட்டும் ஏறத்தாழ 26 லட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 4 லட்சம் இன்ஜியரிங் படிக்கும் மாணவர்களில் 46% பேர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். 2ம் தவனை தடுப்பூசியை 12%  மட்டும் போட்டுள்ளனர். எனவே, இவர்களையும் இலக்கு வைத்து தடுப்பூசி போடப்படும்.இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டு 9 மாதகாலம் முடிந்தவர்களுக்கு 10ம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கும். சென்னையில் ஒரு முகாம் அமைத்து முதல்வர் மூலம் அப்பணி தொடங்கும். தடுப்பூசி போட்டுக்கொள்வதும், முகக்கவசம் அணிவதும், வழிமுறைகளை கடைபிடிப்பதும் மட்டும் தான் கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளும் உதவும்.

கொரோனா பெரிய அளவில் உருவெடுக்கும் என்கிறார்கள். மே 21ம் தேதி தான் 36,184 பேருக்கு அதிக தொற்று இருந்தது. எனவே, அந்த அளவிற்கு தொற்று அதிகரிக்குமா என்ற அச்சம் உள்ளது. தொற்றாளர்களை ஒரு வாரம் கண்காணித்ததில், ஒமிக்ரான் பாதித்தவர்களுக்கு 3 நாட்களிலேயே நெகடிவ் வருகிறது. எனவே, ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெகட்டிவ் வந்தாலும் 5 நாள் சிகிச்சையில் வைத்திருக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரையிலும் மொத்தமாக 86.22 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 58.82 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். குறிப்பாக சென்னையில் மட்டும் 91 சதவீதம் பேர் முதல் தவணையும், 69 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். சென்னையில் மட்டும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தவில்லை.

உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளதை போல  3வது அலையில் டெல்டாவும், ஒமிக்ரானும் சேர்ந்து வீசிக்கொண்டிருக்கிறது. இது சுனாமி அலைக்கு இணையாக உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.இது தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை.  தொற்று பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில் விக்டோரியா விடுதியில் உள்ள மாணவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்து விடுதியை காலி செய்து கொடுக்குமாறு கேட்டு இருக்கிறோம். ஈஞ்சம்பாக்கம், மஞ்சம்பாக்கம் போன்ற இடங்களில் 1000 மருத்துவ படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 800 படுக்கைகள் அமைக்கப்படும்.   இவ்வாறு கூறினார்.

மருத்துவ ஆலோசனைகள் பெற தொடர்பு எண்

நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், ‘தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடமிருந்து ரூ.105 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் இருந்தால் 10 நாட்களில் பல மடங்கு தொற்று பாதிப்பு அதிகரிக்கும். சென்னையில் மட்டும் 4.59 லட்சம் குழந்தைகள் 15-18 வயதுடைய மாணவர்கள் இருக்கிறார்கள். மேலும், சென்னை மாநகராட்சி 24/7 மருத்துவ ஆலோசனை பெற 2538 4520, 4612 2300 எண்ணை தொடர்பு கொள்ளலாம்’ என்றார்.

இலவச ஆக்சி மீட்டர்

அமைச்சர் சுப்பிரமணியன் மேலும் கூறுகையில், 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ஒமிக்ரான் தொற்று வந்தால் அவர்களை வீடுகளிலேயே கண்காணிக்கவும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு தொற்று வந்தால்  அவர்களுக்கு அரசின் சார்பில் பல்ஸ் ஆக்சி மீட்டர் தந்து வீடுகளிலேயே இருக்க  வைத்து மாவட்ட மருத்துவ குழுவின் மூலம் விர்ச்சுவல் மானிடரிங் மூலம் தொடர்ந்து அவர்களை கண்காணிக்கும் பணியை செய்ய உள்ளோம் என்றார்.

Related Stories: