தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத காற்றாலை, சூரியசக்தி மின்உற்பத்தி நிறுவுதிறன் அதிகரிப்பு: நிறுவனங்கள், வீடுகளில் அமைக்க ஆர்வம்

சென்னை: தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையிலான காற்றாலை, சூரிய சக்தி மின்உற்பத்தி நிறுவுதிறன் ெதாடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் வீடுகளுக்கான மின்இணைப்பு 2.20 கோடி. இதேபோல், வணிகம் 35 லட்சம், தொழிற்சாலைகள் 7 லட்சம், விவசாயம் 21 லட்சம், குடிசைகள் 9 லட்சம், இதர இனம் 14 லட்சம் என மொத்தம் 3.16 கோடிக்கும் அதிகமான தாழ்வழுத்த மின்இணைப்புகள் உள்ளன. இதுதவிர 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர் அழுத்த மின் பயனீட்டாளர்களும் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் தேவை 12,700 மெகாவாட். இது  கோடைக்காலங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, பொதுமக்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களின் மின்தேவையை பூர்த்தி செய்ய தமிழக மின்வாரியம் பெரும்பாலும் அனல் மின்நிலையத்தையே நம்பி உள்ளது. இதன் மூலம் 4,300 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. இது ஒன்றை வைத்து தமிழகத்தின் அனைத்து மின்தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது. காரணம், அனல் மின்நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும் நிலக்கரியால் அனல் மின்சாரத்தால் காற்று மாசும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தற்போது நீர் மின்நிலையங்கள் 2,300 மெகாவாட், காற்றாலை 9,600 மெகாவாட், சோலார் 4,700 மெகாவாட் என்ற அளவில் மின் உற்பத்தி நிறுவு திறன்களை பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் அமைத்துள்ளனர். இதுதவிர மத்திய தொகுப்பில் இருந்தும், தனியாரிடம் இருந்தும் தேவைக்கு ஏற்ப மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.  

இதனால், ஒன்றிய மாநில அரசுகள் மரபுசாரா எரிசக்தி மூலம் மின்உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகள், மானியங்களை வாரி வழங்கி வருகிறது. மேலும் இத்தகைய முறையிலான திட்டங்களையும் அரசு மற்றும் தனியார் மற்றும் இரண்டு தரப்பு பங்களிப்புடன் புதிதாக பல்வேறு இடங்களில் மின்திட்டங்களை செயல்படுத்தியும் வருகிறது. இதேபோல் தனியார் நிறுவனங்கள், சில வீடுகளிலும் தங்களுக்கு அன்றாட தேவைப்படும் மின்சாரத்தை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் தயாரித்து பயன்படுத்தி வருகின்றன. இதனால், தமிழகத்தில் ஆண்டுதோறும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவுதிறன் உயர்ந்து வருகிறது. அந்தவகையில், 2016ம் ஆண்டு தமிழகத்தில் ஒட்டுமொத்த காற்றாலை மின்உற்பத்தி நிறுவுதிறன் 7613.89 மெகாவாட்டாக இருந்தது. இதுவே கடந்த 2021ம் ஆண்டில் ஒட்டுமொத்த காற்றாலை மின்உற்பத்தி நிறுவு திறன் 9,608.04 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இதேபோல் தமிழகத்தில் வீடுகளின் மேற்கூரையில் சூரியசக்தி மின்உற்பத்தி கட்டமைப்புகளையும் ஏற்படுத்துவதும் அதிகரித்துள்ளது.

அதாவது கடந்த 2016ம் ஆண்டு மாநிலத்தின் ஒட்டுமொத்த சூரியசக்தி மின்உற்பத்தி நிறுவு திறன் 1061.82 மெகாவாட்டாக இருந்தது. இதுவே கடந்த 2021ம் ஆண்டில் தமிழகத்தின் ஒட்டுமொத்த சூரிசக்தி மின்உற்பத்தி நிறுவு திறன் 4,475.21 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. ஒன்றிய, மாநில அரசுகளின் பல்வேறு சலுகைகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க வேண்டும் என்ற மக்களின் நிலைபாடு போன்றவற்றின் காரணமாக தமிழகத்தில் வரும் காலங்களில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின்உற்பத்தி மேலும் அதிகரிக்கும்.

மின்உற்பத்தி நிறுவுதிறன் (மெகாவாட்டில்)

ஆண்டு    சூரியசக்தி    காற்றாலை

2016    1061.82        7613.89

2017    1691.83        7861.46 

2018    1908.57        8197.09

2019    2575.22        8968.91   

2020    3915.88        9304.34      

2021    4475.21        9608.04

Related Stories: