×

தமிழகத்தில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ரூ.1,640 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு: நாமக்கல்லில் அமைச்சர் சேகர்பாபு தகவல்

நாமக்கல்: நாமக்கல்லுக்கு நேற்று வந்த, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அளித்த பேட்டி: தமிழகத்தில் மக்கள் விரும்பும் வழிபாட்டு தலங்களில் வழிபாடு செய்யும் வகையில், புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல், புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு 12 மணி வரை, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அரசு அனுமதி அளித்தது. இதன் மூலம், திமுக தலைமையிலான இந்த அரசு, ஆன்மிகத்திற்கு எதிரான அரசு அல்ல. ஆதரவான அரசு என்பதை நிரூபித்துள்ளது. தமிழகத்தில் முதல்வரின் வழிகாட்டுதல்படி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய கோயில்களை கண்டறிந்து, அங்கு கும்பாபிஷேகம் செய்வதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறோம்.

அதே போல திருப்பணிகளும் செய்யப்பட்டு வருகிறது. திருவேற்காடு, சமயபுரம், இருக்கன்குடி ஆகிய 3 கோயில்களில் உள்ள தங்க நகைகளை, நீதிமன்ற உத்தரவுப்படி விரைவில் அறங்காவலர் குழு நியமித்து ஒன்றிய அரசின் உருக்கு  ஆலைக்கு எடுத்து செல்லப்பட்டு, நகைகளை உருக்கும் பணி நடைபெறும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்தில் ரூ.1,640 கோடி அளவிற்கு கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நடைபெறும் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பாஜக தலைவர்கள் ஆதரவு அளிக்கவேண்டும். நலத்திட்ட பணிகளுக்கு தடைக்கல்லாக இல்லாமல் படிக்கல்லாக இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Tags : Tamil Nadu ,Minister ,Sekarbapu ,Namakkal , Temple lands worth Rs 1,640 crore reclaimed from occupiers in Tamil Nadu: Minister Sekarbabu at Namakkal
× RELATED பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக...