ஏழை மாணவர்கள் ராணுவத்தில் சேர இலவச பயிற்சி அளிப்பதற்காக விருப்ப ஓய்வு பெற்ற ராணுவ வீரர்: 2 கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்று வரவேற்பு

கடையநல்லூர்: கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரம் நாட்டாண்மை தெருவைச் சேர்ந்தவர் சிவன்மாரி (36). இவருக்கு கலா என்ற மனைவியும், முகேஷ் (8)  இஷாந்த் (4) என்ற  இரு மகன்களும் உள்ளனர். இவர் இந்திய ராணுவத்தில் 18 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர், மீரட், அம்பாலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றி விட்டு  நிறைவாக  சண்டிகரில் ஹவில்தாராக பணியாற்றி வந்தார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வரும்போது இங்குள்ள ஏழை மாணவர்கள் ராணுவத்தில் சேருவதற்கு இலவசமாக பயிற்சி அளித்து வந்தார். இதற்காக கடந்த ஓராண்டுக்கு முன்னர் புதிதாக ஒரு பயிற்சி மையம் துவக்கி, கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டாரத்தைச் ேசர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார்.

இந்நிலையில் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த தகுதியான மாணவர்களை ராணுவத்திற்கு அனுப்புவதற்காக முழுமையான பயிற்சி அளிக்க விரும்பிய சிவன்மாரி, தனது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று நேற்று பொதிகை ரயில் மூலம் கடையநல்லூருக்கு வந்தார். அவருக்கு மாணவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் தங்கள் தோளில் தூக்கி வந்தனர். ஆரவாரத்துடன் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு ஊர்வலமாக தென்காசி மாவட்ட முப்படைகள் நலச்சங்க தலைவர் கர்னல் சம்சு செல்வ விநாயகம் மற்றும் ராணுவ வீரர், அவரது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து ராணுவ வீரர் சிவன் மாரி கூறுகையில் ‘‘ஏழை மக்கள் ராணுவம் மற்றும் போலீஸ் பயிற்சி படிப்பிற்கு அதிகம் செலவாகும் என கருதி படிப்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இந்த தயக்கத்தைப் போக்குவதற்காகவே நான் பணியில் இருக்கும்போதே சொந்த ஊருக்கு விடுமுறைக்காக வரும்போது மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து வந்தேன். எனது மாணவர்கள் இதுவரை 31 பேரை செலவே இல்லாமல் ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் இணைய பாடுபட்டு உள்ளேன். இன்னும் அதிக அளவில் ஏழை மாணவர்களை ராணுவத்திற்கு அனுப்புவதற்காகவே தற்போது விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு ஊருக்கு வந்துள்ளேன்’’ என்றார்.

Related Stories: